இரவோடு இரவாக சிறையில் இருந்து தப்பிய 600 கைதிகள்
நைஜீரியா தலைநகரமான அபுஜாவில் சிறைச்சாலை மீது இஸ்லாமிய பயங்கரவாதிகள் முன்னெடுத்த தாக்குதலை தொடர்ந்து 600 கைதிகள் இரவோடு இரவாக தப்பியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவத்தில் 300 கைதிகள் பொலிசாரால கைதாகியுள்ளனர் மற்றும் தாமாகவே சரணடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
செவ்வாய்க்கிழமை இரவு அபுஜாவில் அமைந்துள்ள குறித்த சிறைச்சாலை மீது சக்திவாய்ந்த வெடிகுண்டுகளை வீசி தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். மட்டுமின்றி துப்பாக்கிச் சூடு சம்பவமும் நடந்துள்ளதாக அமைச்சர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரவு 10 மணியளவில் வெடி சத்தங்களும் துப்பாக்கி சத்தம் கேட்டது. குஜே பகுதியில் தாக்குதல் நடத்தியவர்கள் குண்டுவெடிப்புகளால் உருவாக்கப்பட்ட ஒரு துளை வழியாக சிறைக்குள் நுழைந்தனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குஜே சிறைச்சாலையில் 64 இஸ்லாமிய பயங்கரவாதிகள் உட்பட 1,000 பேர்கள் சிறை வைக்கப்பட்டுள்ளனர். இதில், 64 பயங்கரவாதிகளும் குறித்த தாக்குதல் சம்பவத்திற்கு பின்னர் தப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தப்பிய கைதிகளை மீண்டும் கைது செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. 2021ல் 2,500 க்கும் மேற்பட்ட கைதிகள் மூன்று சிறைச்சாலை தாக்குதல்களுக்கு பின்னர் தப்பித்தனர்.
மட்டுமின்றி, 2017 முதல் நைஜீரியாவின் சிறைகளில் இருந்து குறைந்தது 4,307 கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர். தப்பிச்செல்லும் கைதிகளில் பெரும்பாலானோர் விசாரணை கைதிகள் என்றே கூறப்படுகிறது.
மேலும், நைஜீரிய சிறைகளில் 70,000 கைதிகள் உள்ளனர், ஆனால் அரசாங்க தரவுகளின்படி சுமார் 20,000 அல்லது 27% பேர் மட்டுமே தண்டிக்கப்பட்டவர்கள் என தெரியவந்துள்ளது.