கார் விபத்தால் சேதமடைந்த ஜப்பானின் மிகப் பழைமையான கழிவறை!
பல நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்த, ஜப்பானின் மிகப் பழைமையான கழிவறையானது கார் விபத்தினால் சேதமடைந்துள்ளதாக அந்நாட்டுப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கியோட்டா பிராந்தியத்திலுள்ள டொஃபுகுஜி ஆலயத்தில் அமைந்துள்ள இக்கழிவறை 15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனத் தெரிவிக்கப்படுகிறது.
முக்கியமான ஒரு கலாசார சொத்தாக இக்கழிவறை விளங்கியது. ஆனால், இக்கழிவறையின் அசல் பலகைக் கதவு கடந்த திங்கட்கிழமை கார் விபத்தில் சேதடைந்தது.
கலாசார பாரம்பரியங்களைப் பாதுகாப்பதற்குப் பொறுப்பான, கியோட்டோ மரபுரிமைகள் பாதுகாப்பு சங்கத்தைச் சேர்ந்த 30 வயதான ஒருவர், தனது காரை தவறுதலாக பின்னோக்கி செலுத்திய போது இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இக்கழிவறையின் முன்புற கதவுக்கு முன்னால் அவர் காரை நிறுத்திவைத்திருந்தார். பின்னர் கார் ‘ரிவர்ஸ் கியரில்’ இருப்பதை உணராமல் ‘அக்ஸிலேட்டரை’ அவர் அழுத்தி விட்டார் என பொலிஸார் கூறியுள்ளனர்.
‘இக்கழிவறையை புனரமைப்பதற்கு அதிகளவு வேலைகளை செய்ய வேண்டியிருக்கும் என எம்மிடம் கூறப்பட்டுள்ளது’ எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இக்கழிவறையின் சுவர்களிலும் சிறிய சேதங்கள் ஏற்பட்டுள்ளன. எனினும், 2 வரிசைகள் கொண்ட கழிவறைத் தொட்டிகளுக்கு சேதம் ஏற்படவில்லை என கலாசார மரபுரிமை பாதுகாப்பு சங்கத்தின் அதிகாரி நொரிஹிக்கோ முராதா கூறியுள்ளார்.
பாரம்பரியமாக, சந்நியாசிகளுக்கான பயிற்சிகளின் ஒரு பகுதியாக பௌத்த துறவிகள் இவற்றை பயன்படுத்திவந்தனர். ஆனால், தற்போது இது பாவனையில் இருக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘முக்கியமான கலாசார சொத்து ஒன்ற இவ்வாறு சேதமடைந்தமை ஏமாற்றமளிக்கிறது. இதன் கலாசார பெறுமானத்தை மீள நிலைநிறுத்தும் வகையில், அதை எவ்வாறு புனரமைக்கலாம் என்பது குறித்து நாம் கலந்துரையாடுவோம்’ என நொரிஹிக்கோ முராதா கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.