ஜெப்ரி எப்ஸ்டீன் வழக்கு ; ஆயிரக்கணக்கான ஆவணங்களை நீக்கியது அமெரிக்கா!
அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பாலியல் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகி சிறையிலேயே மரணமடைந்த கோடீஸ்வரர் ஜெப்ரி எப்ஸ்டீன் வழக்கு தொடர்பான ஆயிரக்கணக்கான ஆவணங்களை இணைய தளங்களில் இருந்து அமெரிக்கா நீக்கியுள்ளது.
பாலியல் கடத்தல் புகாரில் கைதாகி விசாரணையை எதிர்கொண்டிருந்த ஜெப்ரி எப்ஸ்டீன், 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10 ஆம் திகதி நியூயோர்க் சிறையில் தற்கொலை செய்துகொண்டார்.
சிறையிலேயே மரணமடைந்த கோடீஸ்வரர் ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பில் மில்லியன் கணக்கான ஆவணங்களை அமெரிக்க நீதித்துறை அண்மையில் வெளியிட்டிருந்தது.

பெண்களின் மின்னஞ்சல் முகவரிகள், நிர்வாணப் புகைப்படங்கள் , வங்கி விபரங்கள்
எனினும், அதில் பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர்கள் மற்றும் அந்தரங்க விபரங்கள் சரியாக மறைக்கப்படாததால் எழுந்த பாரிய எதிர்ப்பைத் தொடர்ந்து, அந்த ஆவணங்கள் இணையதளத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளன.
அமெரிக்க நாடாளுமன்றத்தின் உத்தரவின் பேரில், கடந்த வெள்ளிக்கிழமை சுமார் 3 மில்லியன் பக்கங்கள், 1.8 இலட்சம் புகைப்படங்கள் மற்றும் 2,000 காணொளிகள் பொதுமக்களின் பார்வைக்காக வெளியிடப்பட்டன.
இந்த ஆவணங்களில் பாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்கள் மறைக்கப்பட வேண்டும் என்பது சட்ட ரீதியான நிபந்தனையாகும்.
ஆனால், தொழில்நுட்ப மற்றும் மனித தவறுகள் காரணமாக, சுமார் 100-க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்ட பெண்களின் மின்னஞ்சல் முகவரிகள், நிர்வாணப் புகைப்படங்கள் மற்றும் வங்கி விபரங்கள் எவ்வித மறைப்புமின்றி வெளியாகியுள்ளன.
அதோடு சில இடங்களில் பெயர்களின் மீது கோடுகள் இழுக்கப்பட்டிருந்தாலும், அவற்றை எளிதாக வாசிக்கக்கூடிய வகையில் இருந்ததாகப் பாதிக்கப்பட்டவர்களின் சட்டத்தரணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
"நீதித்துறை செய்த இந்த தவறால் எங்களின் வாழ்க்கை தலைகீழாக மாறியுள்ளது. புதிய தகவல்களை விட, எங்களின் அடையாளம் வெளியானதால் ஏற்பட்டுள்ள பாதிப்பே அதிகமாக உள்ளது என ஆனி ஃபார்மர் (பாதிக்கப்பட்டவர்) தெரிவித்தார்.
அதோடு "எங்கள் பெயர்களை வெளியிட்டதன் மூலம் நீதித்துறை எங்களை மீண்டும் காயப்படுத்தியுள்ளது. எங்களின் வங்கி விபரங்கள் வெளியானதால் கொலை மிரட்டல்களும் வருகின்றன என லிசா பிலிப்ஸ் (பாதிக்கப்பட்டவர் ) கூறியுள்ளார்.
இந்தத் தவறுக்காக வருத்தம் தெரிவித்துள்ள அமெரிக்க நீதித்துறை, பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது சட்டத்தரணிகளால் அடையாளம் காட்டப்பட்ட அனைத்து கோப்புகளும் நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
"பாதிக்கப்பட்டவர்களின் பாதுகாப்பை நாங்கள் மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம். இதுவரை வெளியிடப்பட்ட பக்கங்களில் 0.1 சதவீதத்திற்கும் குறைவான பக்கங்களிலேயே இவ்வாறான தவறுகள் நடந்துள்ளன.
அவற்றைச் சரிசெய்யும் பணிகளில் 24 மணிநேரமும் ஈடுபட்டுள்ளதாகவும் அமெரிக்க நீதித்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய நபர்களின் விபரங்களைப் பகிரங்கப்படுத்துமாறு அமெரிக்க நாடாளுமன்றம் வழங்கிய அழுத்தத்தைத் தொடர்ந்தே இந்த ஆவணங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.