எந்த நேரத்திலும் தயார்... கிம்மின் சகோதரி அமெரிக்காவுக்கு கடும் எச்சரிக்கை
அமெரிக்கா மற்றும் தென் கொரியாவிற்கு எதிராக பெரும் நடவடிக்கையை எடுக்க வட கொரியா தயாராக இருப்பதாக கிம் ஜோங் சகோதரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கொரிய தீபகற்பத்தில் அமெரிக்கா - தென்கொரிய படைகள் கடந்த சில நாட்களாக ராணுவ பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அத்துடன், இம்மாத இறுதியில் இரு நாடுகளும் மிகப் பெரிய அளவிலான ராணுவ பயிற்சிகளை மேற்கொள்ளவும் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், கிம்மின் சகோதரி அமெரிக்கா, தென் கொரியாவுக்கு பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து கிம் யோ ஜாங் தெரிவிக்கையில், அமெரிக்கப் படைகள் மற்றும் தென் கொரிய ராணுவத்தின் அமைதியற்ற ராணுவ நகர்வுகளை நாங்கள் கண்காணித்து வருகிறோம்.
இதற்காக எந்த நேரத்திலும் விரைவான பெரிய அளவிலான நடவடிக்கை எடுக்க தயாராக இருக்கிறோம் என்று தெரிவித்தார். மேலும், பசிபிக் பெருங்கடல் அமெரிக்கா அல்லது ஜப்பானின் ஆதிக்கத்திற்கு சொந்தமானது அல்ல எனவும் கிம் யோ காட்டமாக பதிலளித்துள்ளார்.
முன்னதாக, கடந்த ஆண்டு அமெரிக்காவை கடுமையாக விமர்சித்த அவர், நீங்கள் அடுத்த நான்கு வருடங்களுக்கு அமைதியாக உறங்க வேண்டும் என்று நினைத்தால் எங்களைச் சீண்டாமல் இருப்பது நல்லது என்று ஜோ பைடன் அரசுக்கு கிம் யோ ஜாங் எச்சரிக்கை விடுத்திருந்தார்.