முயல்களைக் கொன்ற நபருக்கு 8 ஆண்டுகள் சிறை
கனடாவில் வளர்ப்பு முயல்களைக் கொடூரமாக சித்திரவதை செய்து, அவற்றைக் கொன்ற குற்றச்சாட்டில் ஓருவருக்கு 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஆல்பர்ட்டா மாகாணத்தைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு கனடா நீதிமன்றம் இவ்வாறு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
நிக்கோலஸ் வசீன் என்ற நபரே இவ்வாறு கடுமையான தண்டனைக்கு உள்ளாகியுள்ளார்.
முயல்களுக்குத் தேவையான உணவு, தண்ணீர், தங்குமிடம் அல்லது முறையான கவனிப்பை வழங்கத் தவறியதுடன், அவற்றுக்குத் தேவையற்ற வலி, காயம் மற்றும் பெரும் துன்பத்தை ஏற்படுத்தி, அவற்றைக் கொன்ற அல்லது காயப்படுத்திய 10 குற்றச்சாட்டுகளின் கீழ் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2022 அக்டோபர் இறுதிப் பகுதிக்கும் 2023 ஜனவரிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் இக்குற்றங்கள் நடந்துள்ளன.
கடந்த ஆண்டு நடைபெற்ற இந்த வழக்கின் விசாரணையின் போது, அந்த நபர் முயல்களுக்கு இழைத்த கொடூரங்கள் குறித்த அதிர்ச்சியூட்டும் விபரங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.
குறிப்பாக, 'ஸ்மோக்கி' என்று பெயரிடப்பட்ட ஒரு முயலின் பின்னங்கால் ஒன்றை, கட்டிங் பிளேயர் மூலம் அவர் துண்டித்துள்ளார்.
பின்னர் அந்த முயலை பிளாஸ்டிக் கயிறுகளால் கட்டி, பால் வைக்கும் கூடை ஒன்றில் போட்டு, பல நாட்களாகத் துடிக்கத் துடிக்க சித்திரவதை செய்துள்ளார்.
இந்த வழக்கின் தீர்ப்பை வழங்கிய கிங்ஸ் பெஞ்ச் நீதிமன்ற நீதிபதி மைக்கேல் போர்க் , 32 வயதான நிக்கோலஸ் வசீனின் செயல்கள் மிகவும் "அருவருப்பானது" மற்றும் "கற்பனை செய்து பார்க்க முடியாதது" என்று சாடினார்.
வசீன் செய்த குற்றங்கள் மிகவும் பாரதூரமானவை. தற்காத்துக் கொள்ள முடியாத இந்த அப்பாவி முயல்களுக்கு எதிராக அவர் பயன்படுத்திய வன்முறையின் அளவு மிகக் கொடூரமானது.
பல மாதங்களாக, தன்னை மட்டுமே நம்பியிருந்த, எவ்வித எதிர்ப்பும் காட்ட முடியாத பல முயல்களுக்கு அவர் வேண்டுமென்றே கடுமையான காயங்களையும், நீண்டகாலத் துன்பத்தையும், மரணத்தையும் ஏற்படுத்தியுள்ளார் என நீதிபதி தெரிவித்துள்ளார்.
8 ஆண்டுகள் சிறைத்தண்டனையுடன் சேர்த்து, குற்றவாளியான நிக்கோலஸ் வசீன் தனது வாழ்நாளில் எந்தவொரு விலங்கையும் வளர்க்கவோ அல்லது விலங்குகள் இருக்கும் இடத்தில் வசிக்கவோ கூடாது என வாழ்நாள் தடையும் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.