கனடாவில் வசிக்கும் இந்தியர்களுக்கு பிரதமர் ஜஸ்டின் வெளியிட்ட மகிழ்ச்சி செய்தி!
வாடகைக்கு குடியிருப்பவர்களின் நலனை மேம்படுத்த திட்டமிடும் கனடா அரசாங்கம், வெளிநாட்டிலிருந்து வந்து கனடாவில் வசிப்பவர்கள் சந்திக்கும் மிகப் பெரிய பிரச்சனைக்கு தீர்வு காணவிருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த மகிழ்ச்சியான தகவலை கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
வாடகைக்கு குடியிருப்பவர்களுக்கு பிரத்யேக சட்டம் ஒன்று அறிமுகம் செய்யப்பட உள்ளது.
இது, வாடகைக்கு குடியிருப்பவர்களை பாதுகாக்க கூடிய நடவடிக்கை என கனடா கூறுகிறது. கடந்த சில ஆண்டுகளாக, அதிகரித்து வந்த வீட்டு வாடகைகள், 2023 ஆம் ஆண்டில் உச்சத்தை எட்டியது.
மலிவு விலையில் வீட்டுவசதி என்ற பேச்சுக்கே இடமில்லாமல் போன நிலையில், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான வாடகை எப்போதும் இல்லாத அளவிற்குக் அதிகரித்த நிலையில், காலியான வீடுகளின் எண்ணிக்கை இல்லை என்ற அளவில் குறைந்துபோனது.
இதனால், கனடாவில் வீட்டு வாடகை உச்சத்தை எட்டியதால், வெளிநாட்டில் இருந்து வந்து வேலைபார்ப்பவர்கள் மற்றும் மாணவர்களுக்கான செலவும் கணிசமாக அதிகரித்துவிட்டது.
கனடாவில் வீடு வாடகை என்பது வாழ்க்கைச் செலவுகளை வெகுவாக பாதித்துள்ளதற்கும் வெளிநாட்டினரின் குடியேற்றத்துக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.
கனாடாவிற்கு மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் படிக்க வருவதால் தான் வீட்டு வாடகைகள் அதிகமாக இருப்பதாகவும் எனவே, மாணவர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற உள்ளூர் மக்களின் குரல்களும் உயரத் தொடங்கிவிட்டன.
வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதன் மூலமும், புதிதாக வாடகைகளுக்காக வீடு மற்றும் கட்டுமானங்கள் கட்டுவதற்கு அரசு விதிக்கும் வரிகளைக் குறைப்பதன் அவசியமும் அதிக அளவில் பேசப்படுகிறது.
2023 ஆம் ஆண்டில் கனடாவில் வாடகை 1.7% அதிகரித்துள்ளதாக சில அறிக்கைகள் கூறின. கடந்த ஆண்டு மட்டும், கனடாவிற்கு 1.2 மில்லியன் பேர் புதிதாக வந்தனர்.
வெளிநாட்டவர் அதிக அளவில் வந்து குவிந்துக் கொண்டே இருப்பதால், அங்கு பணியாளர்களுக்கான ஊதியம் உயர்வதில்லை, ஆனால் வாடகை அதிகரித்து வருவது மக்களின் நிதிச்சுமையை அதிகரித்து வந்தது.
இந்த நிலையில், நேர்மையாக வாடகை செலுத்துபவர்களுக்கு நலன்களை வழங்கும் சட்டம் ஒன்றை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாக கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
இந்த புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டால், கடன் தவணை செலுத்துவோருக்கு கிடைக்கும் சலுகைகளைப் போல, 2000 டாலர் அல்லது அதற்கு அதிகமாக வாடகை செலுத்துபவர்களுக்கும் சலுகைகள் கிடைக்கலாம் என்று கூறப்படுகிறது.
அடுத்த ஆண்டு (2025) கனடாவில் தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் மக்கள் பிரச்சனைகளை தீர்க்க வேண்டிய கட்டாயம் அரசுக்கு உள்ளது.
ஏற்கனவே பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான அரசாங்கம் வீட்டு வாடகைகள் அதிகரித்திருப்பதால் ஏற்பட்டிருக்குக்ம் நெருக்கடி காரணமாக கடுமையான அழுத்தத்தில் உள்ளதால், அடுத்த மாதம் தாக்கல் செய்யப்படவிருக்கும் பட்ஜெட்டில் வாடகைதாரர்களுக்கு உதவும் நடவடிக்கைகளை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது.
"வாடகைக்கு குடியிருப்பவர்கள் மற்றும் கனடா இளைஞர்களின் சம்பாத்தியத்தில் பெரும் பகுதி வாடகைக்கு செல்வாகிவிடுகிறது.
எனவே இந்த விஷயத்தில் முக்கியமான சட்டம் ஒன்றை கொண்டு வரவிருக்கிறோம்" என்று பிரதமர் ட்ரூடோ வான்கூவரில் செய்தியாளர் கூட்டத்தில் பேசும்போது கூறினார்.
வட்டி விகிதங்கள் அதிகமாக இருப்பது, சொத்து விலைகளில் அதிகரிப்பு, புதிய வீடு கட்டுமானத் திட்டங்கள் செயல்படுத்தப்படாதது மற்றும் அதிகரிக்கும் வெளிநாட்டினரின் குடியேற்றம் ஆகியவற்றால் ஏற்பட்டிருக்கும் வசிப்பிட பற்றாக்குறையை சமாளிக்காவிட்டால், நடைபெறவிருக்கும் தேர்தலில் ஆளும்கட்சிக்கு பெரிய பின்னடைவு ஏற்படும் என்று அண்மை கருத்துக் கணிப்புகள் காட்டுகின்றன.
அடுத்த மாதம் ஏப்ரல் 16ம் தேதியன்று பிரதமர் ட்ரூடோ அரசு தாக்கல் செய்யவிருக்கும் பட்ஜெட்டில் நியாயமற்ற முறையில் அதிகரித்து வரும் வாடகை மற்றும் மோசமான வீட்டு உரிமையாளர்களுக்கு எதிராக வாடகைதாரர்களை பாதுகாக்க சட்ட உதவி வழங்கவும் முன்வரும்.
அதேபோல சரியான நேரத்தில் வாடகை செலுத்துவதற்கான ஊக்கமும் கொடுக்கப்படலாம். இந்த முடிவு, கனடாவிற்கு சென்று அங்கே வசித்துவரும் இந்தியர்களுக்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பை கொடுத்துள்ளது.