கமலா ஹாரீஸ் - டிர்ம்ப் வீடுகளில் இடம்பெற்ற சிறப்பு நிகழ்ச்சிகள்!
அமெரிக்காவில் தீபாவளி கொண்டாட்டங்கள் தொடங்கி உள்ளன. இதில் முக்கியமாக துணை ஜனாதிபதி கமலா ஹாரீஸ், (Kamala Harris) முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் (Donald Trump) வீடுகளில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளன.
இந்துக்களின் புனித பண்டிகையான தீபாவளி இந்தியாவில் வருகிற 24-ம் திகதி கொண்டாடப்படுகிறது.
அதைப்போல பல நாடுகளிலும் வாழும் இந்தியர்கள் இந்த பண்டிகையை விமரிசையாக கொண்டாட உள்ளனர்.
அந்தவகையில் அமெரிக்காவில் தீபாவளி கொண்டாட்டங்கள் ஏற்கனவே தொடங்கி விட்டது. நாட்டின் பல மாகாணங்களின் தலைநகர், கவர்னர் மாளிகைகளில் தீபாவளி விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
தலைநகர் வாஷிங்டனில் அரசு சார்பில் பல்வேறு கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன. இதில் கலந்துகொள்வதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இந்திய-அமெரிக்க பிரபலங்கள் தலைநகரில் குவிந்து வருகின்றனர்.
வெள்ளை மாளிகையில் கொண்டாட்டம்
இந்த நிலையில் அமெரிக்க துணை ஜனாதிபதியும், இந்திய வம்சாவளியுமான கமலா ஹாரீஸ், தனது வீட்டில் நேற்று பண்டிகையை கொண்டாடினார். இதற்காக பிரபலமான இந்திய-அமெரிக்கர்கள், இந்திய தூதரக அதிகாரிகள் என ஏராளமானோருக்கு அவர் அழைப்பு விடுத்திருந்தார்.
மேலும் முன்னாள் ஜனாதிபதி டிரம்பும் புளோரிடாவில் உள்ள தனது இல்லத்தில் நேற்று தீபாவளி கொண்டாடினார். இதில் பங்கேற்பதற்காக சுமார் 200 இந்திய - அமெரிக்கர்களுக்கு அவர் அழைப்பு விடுத்திருந்தார்.
இதில் இந்திய நடன நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மேலும், பங்கேற்றவர்களுக்கு இந்திய உணவுகளும் பரிமாறப்பட்டன.
இதைப்போல வெள்ளை மாளிகையில் வருகிற 24-ம் திகதி ஜனாதிபதி ஜோ பைடன், (Joe Biden) தனது மனைவி ஜில் பைடனுடன் தீபாவளி கொண்டாட உள்ளார். இதில் ஏராளமான இந்தியர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
இதைத்தொடர்நது 26-ம் திகதி வெளியுறவு மந்திரி ஆன்டனி பிளிங்கன், தனது அமைச்சகத்தில் தீபாவளி விருந்து ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளார். இதில் ஏராளமான தூதரக அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.