ஈராக்கில் இருந்து ட்ரோன் தாக்குதல் ; சவூதியின் முக்கிய எண்ணெய் குழாய் பாதை மூடல்
ஈராக்கில் இருந்து ஏவப்பட்டதாக கூறப்படும் ட்ரோன் தாக்குதல்களைத் தொடர்ந்து, சவூதி அரேபியா தனது பிரதான கிழக்கு–மேற்கு எண்ணெய் குழாய் பாதையின் செயல்பாடுகளை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது.
சவூதி அரேபியாவின் அப்கேக் எண்ணெய் வயலிலிருந்து செங்கடலில் அமைந்துள்ள யான்பு துறைமுகம் வரை சுமார் 1,200 கிலோமீட்டர் நீளத்திற்கு பரந்து விரிந்துள்ள இந்த எண்ணெய் குழாய் தொகுதி, ரியாத் மற்றும் மதினா பகுதிகளில் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குழாய் பாதையின் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக சவூதி அரேபியாவின் ஆற்றல் அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், ஈராக்கின் மைசான் மாகாணத்தில் இருந்தே ட்ரோன்கள் ஏவப்பட்டதாக ஈராக் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
தனது நாட்டின் எல்லைப் பகுதியை தாக்குதல்களுக்கு பயன்படுத்த அனுமதித்ததாக கூறி, சம்பந்தப்பட்ட இராணுவத் தளபதியை ஈராக் அரசு பதவி நீக்கம் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஈரான் எல்லையும் மூடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சவூதி அரேபியாவின் மொத்த எண்ணெய் ஏற்றுமதியில் சுமார் 4 முதல் 5 சதவீதம் வரை இந்த கிழக்கு–மேற்கு குழாய் பாதை ஊடாக கொண்டு செல்லப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
ஹோர்மூஸ் நீரிணை ஏற்கனவே முடக்கப்பட்டுள்ள நிலையில், சவூதி அரேபியா பயன்படுத்தி வந்த முக்கிய மாற்று எண்ணெய் விநியோகப் பாதையும் தற்போது தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
இதன் தாக்கமாக உலக சந்தையில் பிரெண்ட் மசகு எண்ணெயின் விலை பீப்பாய் ஒன்றுக்கு 104 அமெரிக்க டொலர்களைத் தாண்டி உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் உலகளாவிய எரிபொருள் விநியோகத்தில் மேலும் நெருக்கடி ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.