ரஷ்ய ஜனாதிபதிக்கு திருக்குறளை பரிசளித்தார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி
புதுடெல்லியில் நடைபெறவுள்ள 18 ஆவது பிரிக்ஸ் (BRICS) உச்சிமாநாட்டிற்கு முன்னதாக, இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அதன்போது, திருவள்ளுவர் இயற்றிய பழமையான தமிழ் செவ்வியல் நூலான 'திருக்குறளின்' ரஷ்ய மொழிபெயர்ப்புப் பிரதியை, ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு பிரதமர் மோடி பரிசளித்தார்.
திருவள்ளுவரின் 1,330 குறட்பாக்களும் இந்த ரஷ்யப் பதிப்பில் இடம்பெற்றுள்ளன.
இந்திய அரசின் மத்திய செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தால் வெளியிடப்பட்ட இந்த நூலை, நைரா எம் கர்ட்சியான் (Naira Mkrtcheyan) என்பவர் ரஷ்ய மொழியில் மொழிபெயர்த்துள்ளார்.
இந்தியாவின் பண்பாட்டுப் பாரம்பரியத்தைப் பிரதிபலிக்கும் பரிசுகளை ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு பிரதமர் நரேந்திர மோடி வழங்குவது இது முதல்முறையல்ல.
முன்னதாக, 2024ஆம் ஆண்டு கசான் நகரில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் போது, ஜார்க்கண்ட் மாநிலத்தின் 'சோஹ்ராய்' (Sohrai) ஓவியத்தை அவர் விளாடிமிர் புடினுக்குப் பரிசளித்தார்.
அதேபோல, 2025ஆம் ஆண்டில் பகவத் கீதையின் ரஷ்ய மொழிபெயர்ப்புப் பிரதி, அஸ்ஸாம் தேயிலை மற்றும் வெள்ளியிலான குதிரை சிலை ஆகியவற்றை வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.