கதறும் தாய்மார்கள்... இறுதியில் நல்லடக்கம் செய்யப்படும் ரஷ்ய வீரர்கள்
உக்ரைனில் பேரிழப்பை எதிர்கொண்டதாக முதன்முறையாக ரஷ்யா ஒப்புக்கொண்ட நிலையில், கொல்லப்பட்ட வீரர்களுக்கு இராணுவ மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
உக்ரைனில் கடந்த பிப்ரவரி 24ம் திகதி, ஆயிரணக்கணக்கான வீரர்களை போருக்கு அனுப்பி வைத்தது ரஷ்யா. மூன்று நாட்களில் உக்ரைன் தலைநகரை கைப்பற்றுவோம் என சூளுரைத்திருந்த ரஷ்யா, கடந்த 40 நாட்களுக்கும் மேலாக போரிட்டு வருவதுடன், உக்ரைனில் போர் குற்ற நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த நிலையில், உக்ரைனில் பேரிழப்பு ஏற்பட்டுள்ளதை முதன்முறையாக ஒப்புக்கொண்ட ரஷ்ய நிர்வாகம், உக்ரைன் கிழக்கு பகுதியில் மீண்டும் படைகளை குவித்து வருகிறது.
இதனிடையே, உக்ரைனில் கொல்லப்பட்ட ரஷ்ய வீரர்களுக்கு அவர்களின் சொந்த கிராமங்களில் இறுதி அஞ்சலியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இளவயதிலேயே பல வீரர்களும் பலியாகியுள்ளதாகவும், கொல்லப்பட்டவர்களில் பலரும் இதுவரை திருமணமாகாதவர்கள் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
மேலும், இராணுவ மரியாதையுடனே வீரர்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளனர். தாய்மார்களும் உறவினர்களும், இதுபோன்ற நிலை ஏற்பட்டிருக்க கூடாது எனவும், இளவயதில் மரணமடைவது வெட்கக்கேடானது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
வெள்ளிக்கிழமை மட்டும், ஒரே கல்லறைத் தோட்டத்தில் 20கும் மேற்பட்ட இராணுவ வீரர்களுக்கு இறுதி அஞ்சலி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 24ம் திகதிக்கு பின்னர் இதுவரை 19,000 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் தரப்பு தெரிவித்துள்ளது.
ஆனால், உக்ரைனில் தாங்கள் பேரிழப்பை எதிர்கொண்டது உண்மை தான் என குறிப்பிட்டுள்ள ரஷ்யா, எண்ணிக்கையை வெளியிட மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.