சொகுசு படகில் விடுமுறையை கழிக்கும் கிம் ஜோங் உன்: வெள்ளத்தில் மூழ்கும் நாடு
கொரோனாவுக்கு எதிரான போரில் வெற்றி பெற்றுள்ளதாக அறிவித்த நிலையில், வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன் சொகுசு படகில் விடுமுறையை கழிக்க சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பான செயற்கைகோள் புகைப்படங்களும் தற்போது வெளியாகியுள்ளது. கிம் ஜோங் பொதுவாக பயன்படுத்தும் சொகுசு படகுகளில் ஒன்றில், இந்த முறையும் அவர் விடுமுறையை கழிக்க சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
வட கொரியத் தலைவர் கிம் ஜோங் உன் 13 நாட்களுக்கும் மேலாக அரசு ஊடகங்களில் தோன்றாததற்கு வெளிப்படையான காரணம் விடுமுறைக்கு சென்றுள்ளதால் தான் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
மேலும் கடந்த மாதம் அவர் சுமார் 19 நாள் பொதுவெளியில் தோன்றாமல் இடைவெளி எடுத்துக் கொண்டார். வடகொரியாவில் பல பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன, இது பெரிய கட்டுமான திட்டம் ஒன்றையும் பயிர்களையும் சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.
நாடு தற்போது கொரோனா மற்றும் பெருவெள்ளம், வேளாண் சேதம் என கடும் நெருக்கடியில் சிக்கியிருக்கும் போது கிம் ஜோங் உன் 13 நாட்களாக விடுமுறையில் உள்ளார்.
மட்டுமின்றி, அவரது 180 அடி கொண்ட சொகுசு படகானது ஆகஸ்ட் 3 முதல் ஆகஸ்ட் 5 வரை வொன்சானுக்கு வடக்கே ஹோடோ தீபகற்பத்தில் உள்ள கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்ததாக செயற்கைகோள் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.