ஐந்து மாதங்களுக்குப் பின் பொதுவெளியில் தோன்றிய கிம் மனைவி
வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன்னின் (Kim Jong-Un) மனைவி ரி சோல் ஜு (Ri Sol-ju) , ஐந்து மாதங்களுக்குப் பின்னர் முதன்முறையாக பொதுவெளியில் தென்பட்டுள்ளார்.
கொரோனா பெருந்தொற்று தொடங்கியதில் இருந்தே வட கொரிய அதிபரின் குடும்பத்தினர் அதிகமாக பொது நிகழ்ச்சிகளில், பொதுவெளியில் வருவதில்லை.
இந்நிலையில், வட கொரியாவின் புத்தாண்டை ஒட்டி தலைநகர் பியாங்யாங்கில் உள்ள மன்சுடே கலையரங்கில் நடைபெற்றக் கலை நிகழ்ச்சியைக் காண கணவர் கிம் ஜோங் உன்னுடன் (Kim Jong-Un) வந்தார் ரி சோல் ஜு (Ri Sol-ju).
இதனை வட கொரியாவின் அதிகாரபூர்வ ஊடகமான கேசிஎன்ஏவும் உறுதி செய்துள்ளது. கடைசியாக இவர் கடந்த செப்டம்பர் 9, 2021ல், குமுசுசன் மாளிகைக்கு கணவருடன் சென்றார்.
அந்த மாளிகையில் கிம்மின் (Kim Jong-Un) தந்தை, தாத்தா ஆகியோரின் பதப்படுத்தப்பட்ட உடல்கள் பாதுகாக்கப்படுகின்றன. இந்நிலையில் நேற்று புத்தாண்டை ஒட்டி மன்சுடே கலையரங்கிற்கு கணவருடன் வந்த ரி சோல் ஜுவை (Ri Sol-ju) மக்கள் ஆரவாரம் பொங்க வரவேற்றனர்.
அதேவேளை கிம் ஜோங் உன்னின் தந்தைக்குப் பல தாரங்கள் இருந்ததாகவும், எனினும் அவர் வாழ்நாளில் ஒருமுறை கூட மனைவியுடன் பொது நிகழ்வுக்கு வந்ததில்லை என்றும் கூறப்படுகின்றது.
ஆனால் மாறாக கிம் ஜோங் உன்னின் (Kim Jong-Un) மனைவி ரி (Ri Sol-ju), அவருடன் கலாச்சார, கலை நிகழ்வுகளுக்கு மட்டுமல்லாது ராணுவ நிகழ்வுகளுக்கும் உடன் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
இதன் காரணமாக கிம்மின் மனைவியான ரி சோல் (Ri Sol-ju) உலகளவில் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளார்.