திருவண்னாமலையில் ஏற்பட்ட மண்சரிவு... 5 சிறுவர்கள் உட்பட 7 பேர் உயிரிழப்பு!
தமிழகத்தில் உள்ள திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்படும் மலையில் ஏற்பட்ட திடீர் மண் சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 7 பேர் உயிரிழந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஃபெஞ்சல் புயcலின் தாக்கத்தால் திருவண்ணாமலை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் கடந்த 1-ம் திகதி இரவு முதல் கனமழை பெய்துள்ளது.
திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்படும் 2,668 அடி உயர அண்ணாமலையில் இருந்து வழிந்தோடிய மழைநீரால் நகரம் முழுவதும் வெள்ளக்காடாக மாறியது.
மலை அடிவாரத்தில் உள்ள கிராமங்கள் மற்றும் கிரிவல பாதையை ஒட்டியுள்ள குடியிருப்புகளில் மழைநீர் சூழ்ந்தது. அப்போது, மகா தீபம் ஏற்றப்படும் மலையில் திடீரென மண் சரிவு ஏற்பட்டது.
இதன்போது, மலை அடிவாரத்தில் இருந்த 4 வீடுகள் மண் சரிவில் சிக்கிக் கொண்டன. அந்த வீடுகளில் இருந்த 7 பேரே மண் சரிவில் சிக்கி உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.