பாலஸ்தீனியர்களை குறிவைக்கும் சட்டம்? ; இஸ்ரேல் மீது ஐ.நா. குற்றச்சாட்டு
இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள புதிய மரண தண்டனைச் சட்டம் சர்வதேச சட்டங்களுக்கு எதிரானது, எனவே அதனை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனவும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகம் வலியுறுத்தியுள்ளது.
எந்தவொரு சூழ்நிலையிலும் மரண தண்டனை வழங்கப்படுவதை ஐக்கிய நாடுகள் சபை எதிர்க்கின்றது.

இந்தநிலையில் புதிய சட்டத்தை அமுல்படுத்துவது கொடூரமான மற்றும் மனிதாபிமானமற்ற தண்டனைகளைத் தடை செய்யும் சர்வதேச விதிகளை மீறுவதாகும் என ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்தச் சட்டம் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரை மற்றும் இஸ்ரேலில் உள்ள பாலஸ்தீனியர்களுக்கு மட்டுமே பிரத்யேகமாகப் பயன்படுத்தப்படும் வகையில் அமைந்துள்ளதால், இது இன ஒதுக்கல் மற்றும் இனப் பாகுபாட்டை மேலும் உறுதிப்படுத்துவதாக குறித்த அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.
பெரும்பாலும் முறையற்ற விசாரணைகளுக்குப் பின்னரே பாலஸ்தீனியர்கள் தண்டிக்கப்படுவதாகவும், இந்த சூழ்நிலையில் குறித்த சட்டம் பாரிய மனித உரிமை மீறலாகும் என்றும் ஐக்கிய நாடுகளின் அலுவலகம் தனது சமூக வலைத்தள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.