ஷேக் ஹசீனாவை இந்தியாவிலிருந்து அழைத்து வர சட்ட நடவடிக்கைகள் நிறைவு
பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை இந்தியாவிலிருந்து மீண்டும் பங்களாதேஷத்திற்கு அழைத்து வருவதற்கான அனைத்து சட்டப்பூர்வ நடவடிக்கைகளும் நிறைவடைந்துள்ளதாக பங்களாதேஷ அரசு அறிவித்துள்ளது.
பங்களாதேஷ சட்டத்துறை அமைச்சர் முகமது அசதுஸ்ஸமான், இன்று (நவம்பர் 14) இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர், ஷேக் ஹசீனாவை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருவதற்குத் தேவையான அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் பங்களாதேஷம் நிறைவு செய்துள்ளதாகவும், அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது இந்தியாவின் பொறுப்பு எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்தியா மற்றும் வங்கதேசம் இடையிலான இருதரப்பு ஒப்படைப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஷேக் ஹசீனாவை வங்கதேசத்திடம் ஒப்படைப்பது சட்டப்பூர்வமான நடைமுறை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஷேக் ஹசீனாவுக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனைக்கு எதிராக மேன்முறையீடு செய்வதற்கான சட்ட வாய்ப்புகள் இல்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2024ஆம் ஆண்டு பங்களாதேஷத்தில் இடம்பெற்ற நாடளாவிய மாணவர் போராட்டத்தைத் தொடர்ந்து, அப்போதைய பிரதமர் ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்தார்.
இதனைத் தொடர்ந்து, போராட்டக்காரர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட வன்முறைகள் தொடர்பில் பங்களாதேஷத்தின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தில் அவருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், அவரை மீண்டும் பங்களாதேஷத்திற்கு அழைத்து வருவதற்கான சட்ட நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளமை, இந்தியா – பங்களாதேஷ உறவுகளில் முக்கியத்துவம் வாய்ந்த விவகாரமாக மாறியுள்ளது.
எனினும், ஷேக் ஹசீனாவை இந்தியா ஒப்படைக்குமா என்பது தொடர்பில் இந்திய அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ முடிவு வெளியாகவில்லை.