பிரதமரை பதவி விலகுமாறு கோரத் தீர்மானித்த கட்சி உறுப்பினர்கள்
கனடாவில் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோவை கட்சித் தலைமைப் பதவியிலிருந்து விலகுமாறு கோருவதற்கு தீர்மானித்துள்ளதாக ஒரு தொகுதி கட்சி உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
எதிர்வரும் வரும் புதன்கிழமை நடைபெறும் கூட்டத்தில் ட்ரூடோவிடம் நேரடியாக கேட்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் தேர்தலில் கட்சியின் நலனுக்காக ட்ரூடோ ஒதுங்க வேண்டும் என்ற குழுவினர் கோரிக்கை விடுக்க உள்ளனர்.
ரொறன்ரோ மற்றும் மொன்றியலில் நடைபெற்ற இரண்டு இடைத்தேர்தல்களில் லிபரல் கட்சி அண்மையில் தோல்வியைத் தழுவியிருந்தது.
இந்த தேர்தல்களின் போது பிரதமர் அலுவலகம் உரிய முறையில் செயற்படத் தவறியதாகவும் இது ஏமாற்றமளிப்பதாகவும் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
அட்லாண்டிக் கனடாவில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் மீது தங்கள் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை, உட்கட்சி பூசல்கள் தொடர்பில் பேசுவதற்கு இது பொருத்தமான தருணம் இல்லை எனவும் நாட்டுக்கு வெளிநாடுகளினால் ஏற்படக்கூடிய சவால்களை வெற்றிகொள்ள வேண்டியது அவசியமானது எனவும் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.