உயிருக்கு போராடும் சிங்கம்: கலங்க வைக்கும் புகைப்படங்கள் வெளியானது
எலும்பும் தோலுமாக உயிருக்கு போராடும் சிங்கத்தின் வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.
பாகிஸ்தானின் கராச்சி மிருகக்காட்சி சாலையிலேயே இந்த வீடியோ எடுக்கப்பட்டதாக தெரிகிறது.
அங்கு விலங்குகளுக்கு சரியாக உணவு வழங்குவதில்லை என கூறப்படுகிறது, உணவு சப்ளை செய்யும் ஒப்பந்ததாரர் அம்ஜத் மெஹ்பூப் என்பவருக்கு பிப்ரவரி 2021 முதல் நிர்வாகம் பல மாதங்களாக பணம் கொடுக்கவில்லையாம்.
இதனால் அவர் உணவு வழங்குவதை நிறுத்திவிட்டதாகவும், இதனால் எலும்பும் தோலுமாக சிங்கம் கிடப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் தற்போது பிரச்சனை தீர்க்கப்பட, மீண்டும் உணவு வழங்கப்படவிருப்பதாக மெஹ்பூப் தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையே கராச்சி முனிசிபல் கார்ப்பரேஷன் செய்தித் தொடர்பாளர் அலி ஹசன் சாஜித், சமூக ஊடகங்களில் பரவும் படங்கள் மிகவும் பழைய படங்கள் என்றும், மிருகக்காட்சிசாலைக்கு எதிரான பிரசாரத்தைப் பரப்ப பயன்படுத்தப்படுவதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.