ராஜினாமாவுக்கு பிறகு லிஸ் ட்ரஸுக்கு கிடைக்கவுள்ள வரப்பிரசாதம்!
பிரித்தானிய பிரதமராக வெறும் 44 நாட்களே பொறுப்பில் இருந்த லிஸ் ட்ரஸ்(Liz Truss) இனி ஆண்டு தோறும் 115,000 பவுண்டுகள் உதவித் தொகையாக பெறவிருக்கிறார்.
அவரது ஆயுள் முழுக்க, இந்த நிதியுதவி தொடரும் என்றே தெரியவந்துள்ளது. பிரித்தானிய பிரதமராக மிகக் குறுகிய காலம் பொறுப்பில் இருந்தாலும், சட்ட விதிகளின் அடிப்படையில் அவருக்கும் நாட்டின் பிரதம மந்திரிகளுக்கு அளிக்கப்படும் உதவித்தொகை வழங்கப்படும்.
ஆண்டுக்கு அதிகபட்சம் 115,000 பவுண்டுகள் லிஸ் ட்ரஸ் இனி உதவித்தொகை பெறுவார். பிரித்தானிய பிரதமர் மார்கரெட் தாட்சர் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து 1991ல் இந்த கொடுப்பனவு அரசியல் தலைவருக்கு ஆதரவாக அறிமுகப்படுத்தப்பட்டது.
பத்தாண்டுகளுக்கு மேல் முக்கிய பொறுப்பில் நீடிக்கும் அரசியல்வாதிகளுக்காக இந்த கொடுப்பனவு அறிமுகப்படுத்தப்பட்டாலும், இந்த வாய்ப்பு லிஸ் ட்ரஸுக்கும் (Liz Truss) பொருந்தும்.
பிரதமர்களுக்கான உதவித்தொகையின் உச்சவரம்பு 2011ல் இறுதிப்படுத்தப்பட்டது. 2023 வரையில் இதே தொகை வழங்கப்படும். ஆனால், உரிய முறைப்படி செலவீனங்கள் தொடர்பில் அரசுக்கு கோரிக்கை மனு அளிக்க வேண்டும்.
முன்னாள் பிரதமர்கள் அனைவருக்கும், இந்த உதவித்தொகை அளிக்கப்படும், அவர்கள் தற்போது நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்தாலும், இது பொருந்தும். முன்னாள் பிரதமர்கள் தெரசா மே(Theresa May), போரிஸ் ஜான்சன்(Boris Johnson) மற்றும் தற்போது லிஸ் ட்ரஸ்(Liz Truss) இந்த வரிசையில் இணைந்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருப்பதால், இவர்கள் தனியாக 84,144 பவுண்டுகள் ஊதியம் பெறுவார்கள். ஆனால், முன்னாள் பிரதமர் ஒருவர் அவரது கட்சியின் சார்பில் எதிர்க்கட்சி தலைவராக பொறுப்பேற்றால், இந்த கொடுப்பனவு பெற முடியாமல் போகும்.
ஆண்டுக்கு 115,000 பவுண்டுகள் உதவித்தொகை பெறுவதுடன், ஒரு முன்னாள் பிரதமருக்கு பல்வேறு சலுகைகளும் பொதுமக்கள் வரிப்பணத்தில் அளிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.