பிரித்தானியாவில் அகதிகள் குடியேற்றத்திற்கு எதிராக உள்ளூர் மக்கள் போராட்டம்
அகதிகள் குடியேற்றத்திற்கு எதிரான உள்ளூர் மக்களின் போராட்டம் சவுத்போர்ட், ரூதர்ஹம் உள்பட பல்வேறு நகரங்களிலும் பரவி வருகிறது.
குறித்த பிரதேசத்தில் போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுக்கும் பொலிசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ள நிலையில் இந்த மோதலில் 10 பொலிசார் காயமடைந்துள்ளனா்.
மக்கள் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று இங்கிலாந்து பிரதமர் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து நாட்டின் சவுத்போர்ட் நகரில் உள்ள நடன பள்ளியில் கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற கத்திக் குத்து தாக்குதலில் 3 சிறுமிகள் உயிரிழந்ததுடன் 7 பேர் படுகாயமடைந்த நிலையில், குறித்த தாக்குதலை நடத்திய 17 வயது சிறுவனை பொலிசார் கைது செய்துள்ளனர்.
இந்த தாக்குதல் சம்பவம் சவுத்போர்ட் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தாக்குதல் நடத்தியது இங்கிலாந்தில் அகதியாக குடியேறிய குடும்பத்தை சேர்ந்த சிறுவன் என செய்திகள் பரவியிருந்தன.
இதையடுத்தே அகதிகளுக்கு எதிராக உள்ளூர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.