போப் லியோவுக்கு நுரையீரல் அறுவை சிகிச்சை
பரிசுத்த பாப்பரசர் போப் லியோவின் நுரையீரலில் கண்டறியப்பட்ட சிறிய கட்டியை அகற்றுவதற்காக, எதிர்வரும் நாட்களில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளதாக வத்திக்கான் அறிவித்துள்ளது.
ரோமில் உள்ள சென் பீட்டர்ஸ் சதுக்கத்தில் நடைபெற்ற ஞாயிற்றுக்கிழமை வழிபாட்டின்போது உரையாற்றிய பரிசுத்த பாப்பரசர் லியோ, அண்மையில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையின்போது தனது நுரையீரலில் ஆரம்பக் கட்டத்தில் உள்ள சிறிய கட்டி கண்டறியப்பட்டதாகத் தெரிவித்தார்.

மருத்துவக் குழுவின் பரிந்துரைக்கு இணங்க, குறித்த கட்டியை அறுவை சிகிச்சை மூலம் அகற்றுவதற்கு தான் சம்மதித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். வத்திக்கானின் பேச்சாளர் மேட்டியோ புரூனி தெரிவிக்கையில்,
எதிர்வரும் வாரத்தின் ஆரம்பத்தில் இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், அதன்பின்னர் பரிசுத்த பாப்பரசர் லியோ குணமடைவதற்கு சுமார் ஒரு வார காலம் தேவைப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
இந்த அறுவை சிகிச்சை ரோமில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் நடைபெறவுள்ளது. அதேசமயம் எதிர்வரும் நவம்பர் மாதம் உருகுவே, ஆர்ஜென்டினா மற்றும் பெரு ஆகிய நாடுகளுக்கு மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ள தனது பயணம், அறிவிக்கப்பட்ட திட்டத்தின்படியே நடைபெறும் என்றும் பரிசுத்த பாப்பரசர் லியோ தெரிவித்துள்ளார்.