ரியாத் விமான நிலையம் மீது பாரிய குரூஸ் ஏவுகணைத் தாக்குதல்
சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் உள்ள விமான நிலையம் மற்றும் நிதி மையம் மீது பாரியளவிலான குரூஸ் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளதாக யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, மத்திய யேமனில் சவூதி அரேபியா நடத்திய வான்வழித் தாக்குதல்களில் ஒரு குழந்தை உட்பட குறைந்தது மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக அக்குழு அறிவித்துள்ளது.

அறிக்கை
சமூக வலைத்தளமான 'எக்ஸ்' (X) தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரியாத்தில் உள்ள மன்னர் காலித் சர்வதேச விமான நிலையம் மற்றும் நிதி மையம் ஆகியவற்றை இலக்கு வைத்து "பெருமளவிலான குரூஸ் ஏவுகணைகளை" ஏவியுள்ளதாக ஹூதி இராணுவப் பேச்சாளர் யஹ்யா சாரியா தெரிவித்துள்ளார்.
யேமனில் உள்ள பொதுமக்கள் வசதிகள் மீது சவூதி நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாகவே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக வெளியிட்டிருந்த மற்றுமொரு அறிக்கையில், கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் தலைநகர் சனா மற்றும் எட்டு மாகாணங்களில் உள்ள பொதுமக்கள் வசதிகளை இலக்கு வைத்து சவூதி விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் யேமனின் பல பகுதிகளில் 87 தாக்குதல்களை நடத்தியுள்ளதாகக் கூறியிருந்தார்.
நேற்று மத்திய யேமனின் இப் (Ibb) மாகாணத்தில் சவூதி நடத்திய வான்வழித் தாக்குதல்களில் ஒரு குழந்தை உட்பட குறைந்தது மூன்று பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஐவர் காயமடைந்துள்ளதாக ஹூதிகளினால் நிர்வகிக்கப்படும் அல்-மசிரா தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தத் தகவல்களைச் சுயாதீனமாக உறுதிப்படுத்த முடியவில்லை.