வொஷிங்டனில் வரலாறு காணாத கனமழை; கனடாவை இணைக்கும் நெடுஞ்சாலைகள் முடக்கம்
அமெரிக்காவின் வொஷிங்டன் மாகாணத்தில் பெய்த வரலாறு காணாத கனமழையால் கடும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. வெள்ளம் காரணமாக ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு வெளியேற்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Skagit நதி கரைபுரண்டு ஓடியதன் காரணமாக, பல நகரங்கள் மற்றும் கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. ப்யூஜெட் சவுண்ட் அருகே அமைந்துள்ள பர்லிங்டன் (Burlington) நகரம் முழுவதும், சுமார் 9,200 பேர் வசிக்கும் பகுதியாகும்.

ஒரு மாதத்தில் பெய்ய வேண்டிய மழை, ஒரே வாரத்தில் பெய்துள்ளது
வெள்ள அபாயம் காரணமாக வெள்ளிக்கிழமை (12) அதிகாலை அங்கிருந்து முழுமையாக வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டது. மவுண்ட் வெர்னன் பகுதியில் ஸ்காஜிட் ஆற்றின் நீர்மட்டம் 38 அடி (11.6 மீட்டர்) உயரத்தை எட்டியதாகவும், இது இதுவரை பதிவான அதிகபட்ச நீர்மட்டம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வெள்ளம் சூழ்ந்ததால், வீதிகள் முழுவதும் வெள்ளக்காடாக மாறின. இந்த நிலையில், வீட்டு மேற்கூரையில் தஞ்சமடைந்த இருவர், அமெரிக்க தேசிய காவல் படையினரால் ஹெலிக்கொப்டர் மூலம் கயிறுகட்டி மீட்கப்பட்டனர்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில், அமெரிக்க தேசிய காவல் படையினர் மற்றும் மீட்புக்குழுவினர் வீடு வீடாக சென்று மக்களை வெளியேற்றினர். கடந்த ஒரு வாரமாக பெய்த கனமழைக்கு காரணமாக, கடலில் உருவாகும் ‘Atmospheric River’ எனப்படும் ஈரப்பதம் நிறைந்த வளிமண்டல ஓட்டங்கள் மேற்குப் பசிபிக் பகுதிக்குள் நுழைந்ததே காரணம் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வெள்ள பாதிப்பு பகுதிகளுக்கு அவசர நிலை
அமெரிக்க வானிலை கணிப்பு மையத்தின் தகவலின்படி, கடந்த 7 நாட்களில் 6 முதல் 60 அங்குலம் வரை மழை பதிவாகியுள்ளது. “ஒரு மாதத்தில் பெய்ய வேண்டிய மழை, ஒரே வாரத்தில் பெய்துள்ளது” என வானிலை நிபுணர் ரிச் ஒட்டோ தெரிவித்தார்.
ஸ்காஜிட் நதியின் கரையோர அணைகள் உடைப்பு அபாயம் தொடர்கிறது. இதனால், நதியின் கீழ்ப்பகுதிகளில் Flash Flood Watch அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், வெள்ள பாதிப்பு பகுதிகளுக்கு அவசர நிலையை (Federal Emergency Declaration) அறிவித்துள்ளார்.

தற்காலிகமாக மழை குறைந்தாலும், ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் திங்கட்கிழமை வரை மீண்டும் புதிய Atmospheric River புயல் உருவாகக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, வீதிகள், ரயில் பாதைகள், கனடாவை இணைக்கும் முக்கிய நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட பல போக்குவரத்து வழிகள் முடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.