சுவிட்சர்லாந்தில் பெரும் வாகன நெரிசல் ; நெடுஞ்சாலையில் உலா வந்த ஐந்து மாடுகள்
சுவிட்சர்லாந்தில் அதிவேக நெடுஞ்சாலைக்குள் ஐந்து மாடுகள் புகுந்ததால், குறித்த வீதியூடான போக்குவரத்து சுமார் ஒரு மணி நேரம் 15 நிமிடங்கள் தடைப்பட்டதுடன், பாரிய வாகன நெரிசலும் ஏற்பட்டுள்ளது.
லோசான் (Lausanne) நோக்கிச் செல்லும் ரோல் (Rolle) மற்றும் மோர்ஜஸ் (Morges) பகுதிகளுக்கு இடையிலான நெடுஞ்சாலையில் நேற்று வியாழக்கிழமை இரவு சுமார் 7 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஐந்து மாடுகளும் ரோல் பகுதிக்கு அருகிலுள்ள அதிவேக நெடுஞ்சாலைக்குள் நுழைந்து, பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளன.

தொடர்ந்து ஆபோன் (Aubonne) மற்றும் அல்லமான் (Allaman) பகுதிகளுக்கு அருகில் மீண்டும் நெடுஞ்சாலைக்குள் நுழைந்து மோர்ஜஸ் நோக்கிப் பயணித்துள்ளன.
இதனால் குறித்த நெடுஞ்சாலையில் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், நீண்ட வாகன வரிசைகளும் ஏற்பட்டுள்ளன. இதனையடுத்து மோர்ஜஸ் நோக்கிய பாதை சுமார் ஒரு மணி நேரம் 15 நிமிடங்களுக்கு மூடப்பட்டது.
இரவு சுமார் 9.15 மணியளவில் போக்குவரத்து மீண்டும் வழமைக்குத் திரும்பியதாக வோட் மாகாண பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் எவ்வித விபத்துகளோ உயிரிழப்புகளோ ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, மோர்ஜஸ் பகுதியில் மாடுகளின் உரிமையாளர் நான்கு மாடுகளை மீட்டுச் சென்றுள்ளார்.
ஐந்தாவது மாடு இரவு சுமார் 11 மணியளவில் நெடுஞ்சாலைக்கு வெளியே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மாடுகள் எவ்வாறு அதிவேக நெடுஞ்சாலைக்குள் நுழைந்தன என்பது தொடர்பில் இதுவரை தெளிவான தகவல்கள் வெளியாகவில்லை.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.