239 பேருடன் 10 ஆண்டுகளுக்கு முன் மாயமான விமானத்தை தேடும் மலேசியா!
10 ஆண்டுகளுக்கு முன் 239 பேருடன் மாயமான மலேசிய விமானத்தை வருகிற 30-ந்தேதி முதல் ஆழ்கடலுக்குள் சென்று மீண்டும் தேடுதல் பணி தொடங்கப்படவுள்ளது.
மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் இருந்து சீனாவின் பீஜிங் நகருக்கு கடந்த 2014-ம் ஆண்டு மார்ச் 8-ந்தேதி போயிங் 777 ரக விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. மொத்தம் 239 பேர் இருந்த அந்த விமானத்தில், சீன பயணிகளே அதிகளவில் இருந்தனர்.

ரேடாரில் இருந்து விலகி சென்ற விமானம்
இந்நிலையில் அந்த விமானம், அதன் பயண பாதையில் இருந்து விலகி, தெற்கு நோக்கி சென்று பின்னர் இந்திய பெருங்கடலின் தெற்கு உள்பகுதிக்கு சென்று மறைந்தது.
அது ரேடாரில் இருந்து விலகி சென்றது. இதனை செயற்கைக்கோள் தரவுகள் தெரிவிக்கின்றன. விமானம் விபத்தில் சிக்கியிருக்க கூடும் என நம்பப்படுகிறது. இதற்கேற்ப, கிழக்கு ஆப்பிரிக்க கடற்கரை மற்றும் இந்திய பெருங்கடல் தீவுகளில் விமானங்களின் சில பாகங்கள் கரை ஒதுங்கின.
இதனை தொடர்ந்து பல நாடுகளும் தேடுதல் பணிகளில் ஈடுபட்டும் அவை தோல்வியிலேயே முடிந்தன. 2018-ம் ஆண்டு ஓசன் இன்பினிட்டி என்ற அமெரிக்காவை சேர்ந்த கடல்சார் ரோபோடிக்ஸ் நிறுவனமும் தேடுதலில் ஈடுபட்டது.

கடலில் இருந்து எதுவும் கண்டறியப்படவில்லை
எனினும், கடலில் இருந்து எதுவும் கண்டறியப்படவில்லை. இந்த சூழலில், அந்நிறுவனம் வருகிற 30-ந்தேதி முதல் 55 நாட்களுக்கு ஆழ்கடலுக்குள் சென்று மீண்டும் தேடுதல் பணியில் ஈடுபட உள்ளது.
இதனை குறிப்பிட்டு மலேசிய போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், இந்த சோக சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உதவும் வகையில் இந்த பணி அமையும் என தெரிவித்து உள்ளது.
எனினும், விமானத்தின் பாகங்கள் ஏதேனும் கண்டறியப்பட்டால் மட்டுமே அந்நிறுவனத்திற்கு ரூ.631 கோடி (70 மில்லியன் டாலர்) சம்பள பணம் கொடுக்கப்படும் என்றும் அரசு தெரிவித்து உள்ளது. இதனால், 10 ஆண்டுகளுக்கு முன் மாயமான மலேசிய விமானத்தின் பாகங்களை ஆழ்கடலில் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட உள்ளது.