கனடாவில் தவறுதலாக குண்டு பாய்ந்து உயிரிழந்த இந்திய இளம்பெண்: சமீபத்திய தகவல்
கனடாவில் இரண்டு கும்பல்களுக்கிடையிலான மோதலின்போது தவறுதலாக குண்டு பாய்ந்து உயிரிழந்த இளம்பெண் விவகாரத்தில் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
இந்தியாவின் பஞ்சாபைச் சேர்ந்தவரான ஹர்சிம்ரத் (Harsimrat Randhawa, 21) என்னும் இளம்பெண், கனடாவுக்குக் கல்வி கற்கச் சென்றிருந்தார்.
பகுதி நேர பணி செய்துவந்த ஹர்சிம்ரத், ஏப்ரல் மாதம் 17ஆம் திகதி இரவு 7.30 மணியளவில், ஹாமில்ட்டன் பகுதியில் பேருந்துக்காக காத்திருந்திருக்கிறார்.
அப்போது அங்கு வந்த ஒரு கருப்பு நிற காரிலிருந்த ஒருவர், சாலையின் மறுபக்கம் நின்றுகொண்டிருந்த ஒரு வெள்ளை நிற காரிலிருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
அப்போது, அவர் சுட்ட ஒரு குண்டு, பேருந்துக்காக காத்திருந்த ஹர்சிம்ரத்தின் மார்பில் பாய்ந்துள்ளது.
துப்பாக்கியால் சுட்டவர்கள் தப்பியோடிவிட, மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட ஹர்சிம்ரத், காயங்கள் காரணமாக பலியாகிவிட்டார்.
இந்நிலையில், ஹர்சிம்ரத் உயிரிழக்கக் காரணமாக இருந்த நபர் செவ்வாயன்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கனடாவின் ஒன்ராறியோவிலுள்ள நயாகரா ஃபால்ஸ் என்னும் இடத்தில் கைது செய்யப்பட்ட அந்த நபரின் பெயர் ஜெர்டைன் ஃபோஸ்டர் (Jerdaine Foster, 32).
அவர் மீது ஒரு கொலைக்குற்றச்சாட்டும், மூன்று கொலை முயற்சிக் குற்றச்சாட்டுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.