140 தொன் எடையுள்ள இடிபாடுகள் ; 8 நாட்களின் பின் உயிருடன் மீட்கப்பட்ட நபர்
வெனிசுவேலாவில் ஏற்பட்ட இரட்டை நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, கட்டிட இடிபாடுகளுக்குள் 8 நாட்களாகச் சிக்கியிருந்த ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
ஹெர்னான் கில் என்ற அவரை 140 தொன் எடையுள்ள இடிபாடுகளுக்கு அடியிலிருந்து மீட்புப் பணியாளர்கள் வெற்றிகரமாக மீட்டுள்ளனர்.

அவரை முதன்முதலில் கண்டுபிடித்ததில் இருந்து, சுமார் 100 மணித்தியாலங்களுக்கும் மேலாகப் போராடியே மீட்புக் குழுவினர் அவரைப் பாதுகாப்பாக வெளியே கொண்டுவந்துள்ளனர்.
இந்த மீட்பு நடவடிக்கை குறித்து கருத்துரைத்துள்ள சிலி நாட்டைச் சேர்ந்த தீயணைப்பு வீரர் ஒருவர் "நான் எனது வாழ்க்கையில் எதிர்கொண்டதிலேயே மிகவும் சிக்கலான மற்றும் தொழில்நுட்ப ரீதியாகக் கடினமான மீட்புப் பணி இதுதான் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை" என்று குறிப்பிட்டார்.
இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த கில்லை மீட்பதற்காக வெனிசுவேலா, சிலி, கொஸ்டாரிகா, எல் சல்வடோர், மெக்சிகோ, போர்த்துகல் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த சர்வதேச மீட்புக் குழுக்கள் ஒன்றிணைந்து செயற்பட்டன.
கடந்த ஜூன் 24 அன்று வெனிசுவேலாவைத் தாக்கிய இந்த இரட்டை நிலநடுக்கங்களில் சிக்கி இதுவரை சுமார் 2,300 பேர் உயிரிழந்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், பல்லாயிரக்கணக்கான மக்கள் இன்னும் காணாமல் போயுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.