பெற்றோரைக் கொலை செய்துவிட்டுத் தலைமறைவாக இருக்கும் நபர் டொராண்டோவில் நடமாட்டம்
தன்னுடைய சொந்தப் பெற்றோரைக் கொலை செய்த குற்றத்திற்காகக் கனடா தழுவிய அளவில் தேடப்பட்டு வரும் 46 வயதுடைய நபர், டொராண்டோ நகரில் நடமாடுவது கண்டறியப்பட்டுள்ளதாகப் பீல் பிராந்திய காவல்துறை (Peel Regional Police) தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான புதிய தகவல்களைக் காவல்துறையினர் தங்களது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். சந்தேக நபரான ஜோர்டான் சாங்வின் (Jordan Sangwin), திங்கட்கிழமை இரவு 11 மணியளவில் டொராண்டோவின் ஹை பார்க் (High Park) பகுதிக்கு அருகில் கடைசியாகக் காணப்பட்டதாகவும், அவர் தற்போது நடந்தே பயணிப்பதாக நம்பப்படுவதாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், அவர் நடந்து செல்லும் புதிய புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகளையும் காவல்துறை வெளியிட்டுள்ளது. குறித்த நபர் நடுத்தர உடல்வாகு, கத்தரித்த நரை கலந்த தலைமுடி (Salt-and-pepper hair), தாடி-மீசை இல்லாத முகம் , கடைசியாகக் காணப்பட்டபோது சாம்பல் நிற நீண்ட கை சட்டையும், அடர் நிற அரைக்கால் சட்டையும் (Shorts) அணிந்திருந்தார். அத்துடன் கறுப்பு நிறப் பயணப் பை (Duffle bag) ஒன்றையும் வைத்திருந்தார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஜூன் 18 ஆம் திகதி மாலை, மிசிசாகாவின் லேக்ஷோர் ரோடு ஈஸ்ட் மற்றும் ஹுரோன்டாரியோ ஸ்ட்ரீட் பகுதிக்கு அருகில் உள்ள வீட்டில் வைத்து, தனது பெற்றோராரான கரோல் சாங்வின் (70) மற்றும் கார்வுட் சாங்வின் (71) ஆகிய இருவரையும் ஜோர்டான் சாங்வின் படுகொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இரு முதல்தரக் கொலைக் குற்றச்சாட்டுகளின் கீழ் (First-degree murder) இவருக்கு எதிராகக் கனடா தழுவிய பிடியாணை (Warrant) பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட வேண்டிய இந்த நபர் ஆயுதங்கள் வைத்திருக்கக் கூடியவர் என்பதால் மிகவும் ஆபத்தானவர் என்று எச்சரித்துள்ள காவல்துறையினர், இவரைக் கண்டால் உடனடியாக 911 என்ற அவசர எண்ணிற்கு அழைக்குமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.
அதேவேளை, குற்றவாளிக்கு அடைக்கலம் தருபவர்கள் அல்லது மறைத்து வைக்க உதவுபவர்கள் மீதும் கடுமையான குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.