விமானத்தை கடத்தி சுப்பர் மார்கெட் மோதச் செய்யப் போவதாக அச்சுறுத்திய நபர்
அமெரிக்காவில் சிறிய விமானமொன்றை கடத்திய நபர், அதனை சுப்பர் மார்கெட் ஒன்றின் மீது மோதச் செய்யப் போவதாக அச்சுறுத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
மிசிசிப்பி மாநிலத்தின் டுபேலோ நகரில் இவ்விமானம் கடத்தப்பட்ட நிலையில் பல மணித்தியாலங்கள் வானில் சுற்றித்திரிந்த அவ்விமானம் பின்னர் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். '
பீச்கிராப்ட் கிங் எயார் 90' ரக விமானமொன்றே இவ்வாறு கடத்தப்பட்டது. இரட்டை என்ஜிகள் கொண்ட இவ்விமானத்தில் 9 பேருக்கான ஆசனங்கள் உள்ளன. டுப்லோ விமான நிலையத்தில் சனிக்கிழமை காலை 5.00 மணியளவில் இவ்விமானம் கடத்தப்பட்டது.
விமான நிலைய ஊழியர் ஒருவராலேயே இவ்விமானம் கடத்தப்பட்டதாகவும் பொலிஸார் அறிந்துகொண்டனர். இதனையடுத்து கடத்தல் காரருடன் பொலிஸார் நேரடியாக உரையாடல்களை நடத்தினர்.
சுப்பர்மார்கெட் ஒன்றின் மீது விமானத்தைக் மோதச் செய்யப் போவதாக கடத்தல்காரர் அச்சுறுத்திய நிலையில், அருகிலுள்ள வோல்ட்மார்ட் சுப்பர் மார்கெட்டிலிருந்த மக்கள் வெளியேற்றப்பட்டனர்.
அத்துடன், அப்பகுதியில் வசிக்கும் மக்களும் முடிந்தளவு வெளியேறுமாறு கோரப்பட்டனர். பல மணித்தியாலம் வானில் சுற்றித்திரிந்த அவ்விமானம் பின்னர், வயல் ஒன்றில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்ட நிலையில் சம்பவத்தில் எவரும் காயமடையவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடத்தலுக்கு காரணமான விமான நிலைய ஊழியர்
விமான நிலைய ஊழியரான கொறி வெய்ன் பட்டேர்சன் என்பவராலேயே இவ்விமானம் கடத்தப்பட்டதாக டுபேலோ நகர பொலிஸ் உயர் அதிகாரி ஜோன் குவாக்கா தெரிவித்துள்ளார்.
29 வயதான பட்டேர்சனிடம் விமானிக்கான அனுமதிப்பத்திரம் இல்லை எனவும் ஆனால் விமானம் செலுத்துவற்கான சில பயிற்சிகளில் பங்குபற்றியவர் எனவும் செய்தியாளர் மாநாட்டில் மேற்படி அதிகாரி கூறியுள்ளார்.
மேலும் விமானத்தை கடத்திய கொறி வெய்ன் பட்டேர்சன் கைது செய்யப்பட்டதுடன் அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் அதிகாரி ஜோன குவாக்கா கூறினார்.