மேனிடோபாவில் பொது சுகாதார அவசர நிலை பிரகடனம்
கனடாவின் மேனிடோபா மாகாணத்தில் எச்.ஐ.வி தொற்று விகிதம் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்து வருவதால், அங்கு பொது சுகாதார அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
மாகாணத்தின் தலைமை பொது சுகாதார அதிகாரி டாக்டர் ப்ரெண்ட் ரூசின், வியாழக்கிழமை காலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது இந்த உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிட்டார்.

கனடாவிலேயே மிக உயர்ந்த எச்.ஐ.வி தொற்று விகிதத்தை மேனிடோபா தொடர்ந்து எதிர்கொண்டு வருவதாக அவர் கவலை தெரிவித்தார்.
புள்ளிவிவரங்களின்படி, 2024 ஆம் ஆண்டில் மேனிடோபாவில் ஒரு லட்சம் பேருக்கு 19.5 பேர் என்ற விகிதத்தில் தொற்று பதிவாகியுள்ளது.
இது கனடாவின் தேசிய சராசரி விகிதமான 5.5 உடன் ஒப்பிடுகையில் சுமார் 3.5 மடங்கு அதிகமாகும். கடந்த 2021 ஆம் ஆண்டில் 142 ஆக இருந்த புதிய எச்.ஐ.வி பாதிப்புகளின் எண்ணிக்கை, கடந்த ஆண்டில் 328 ஆக உயர்ந்துள்ளது.
இந்த சடுதியான உயர்வு மிகவும் கவலைக்குரியது எனக் குறிப்பிட்ட டாக்டர் ரூசின், இதனை எதிர்கொள்ள அரசாங்கங்கள், சமூக அமைப்புகள் மற்றும் சுகாதார அமைப்புகளுக்கு இடையே ஒருங்கிணைந்த செயல்பாடு அவசியம் என வலியுறுத்தினார்.
போதைப்பொருள் ஊசி பயன்பாடு, வீடற்ற நிலை, மனநலப் பிரச்சினைகள் மற்றும் ஏனைய பால்வினைத் தொற்று நோய்களின் அதிகரிப்பு போன்றவை இந்தத் தொற்று பரவலுக்கு முக்கிய காரணங்களாகக் கூறப்படுகின்றன.
குறிப்பாக, வடக்கு மற்றும் பிரெய்ரி மவுண்டன் பகுதிகளில் அதிக தொற்று விகிதமும், வின்னிபெக் (Winnipeg) நகரில் அதிக எண்ணிக்கையிலான பாதிப்புகளும் பதிவாகியுள்ளன.
இதில் பழங்குடியின மக்கள் விகிதாசார ரீதியாகப் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.