யூடுயூப் பிரபலத்தின் திருமணம்; மணமகன் கொடுத்த பரிசு
பாகிஸ்தானை சேர்ந்த பிரபல யூட்யூபர்களான வரிஷா ஜாவேத் கான் மற்றும் அஸ்லான் ஷா ஆகியோர் சமீபத்தில் திருமணம் செய்துகொண்டது தெரிய வந்துள்ளது.
திருமண வரவேற்பு நிகழ்ச்சியின்போது அஸ்லான் ஷா தனது இணையருக்கு கழுதைக் குட்டி ஒன்றை வழங்கி அவரை ஆச்சரியப்படுத்தினார்.
தான் வழங்கிய பரிசை சமூக வலைதளத்தில் புகைப்படமாக பகிர்ந்த ஷா தனது தனித்துவமான பரிசுக்கான காரணத்தையும் விளக்கியுள்ளார்.
"கழுதைக் குட்டிகளை வாரிஷாவுக்கு மிகவும் பிடிக்கும் என்பது எனக்கு தெரியும். அதனால் என் தரப்பிலிருந்து அவளுக்கு இந்த திருமண பரிசு" என்று அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக அந்த கழுதை குட்டி அதன் தாயிடமிருந்து பிரிக்கப்படவில்லை. அதன் தாயையும் சேர்த்தே அழைத்துவரப்பட்டுள்ளது என்று அவர் மேலும் விளக்கியுள்ளார். அஸ்லான் ஷாவின் இந்த பரிசு வாரிஷாவுக்கும் மிகவும் பிடித்துவிட்டது. அவர் கழுதை குட்டியை ஆரத்தழுவி நெற்றியில் தடவிக்கொடுக்கும் புகைப்படமும் வெளியானது.
திருமணத்திற்கு கழுதையைக் கொண்டு வந்து தனது மனைவிக்கு பரிசாக வழங்கிய காணொளியையும் அஸ்லான் ஷா பகிர்ந்துள்ளார்.
அதற்கு அவர் "ஏன் பரிசாக கழுதை? முதல் காரணம், உங்களுக்கு (வாரிஷா) பிடிக்கும், இரண்டாவதாக, இது உலகின் மிகவும் கடின உழைப்பாளி மற்றும் அன்பான விலங்கு" என தெரிவித்துள்ளார்.
கழுதை குட்டியை கண்டவுடன் உற்சாகமடைந்த மணமகள் வாரிஷா,"நான் உன்னை கழுதையாக இருக்க விடமாட்டேன்" என்று கழுதையிடம் பேசுவதும் காணொளியில் பதிவாகி உள்ளது.
தொடர்ந்து அஸ்லான் ஷா, "நான் விலங்குகளை நேசிக்கிறேன், மக்கள் என்ன சொன்னாலும், கழுதை என் மனதிற்கு நெருக்கமான விலங்கு. நான் கழுதையை விரும்புகிறேன், இது வாரிஷாவுக்கு எனது பரிசு" என்று கூறினார். தொடர்ந்து அந்த கழுதை குட்டிக்கு 'போலா' என அந்த இணையர்கள் பெயர் சூட்டியுள்ளனர்.
மணமகனின் கழுதை குட்டி பரிசை கண்டு இணையத்தில் பலரும் வியந்து பாராட்டியுள்ளனர். மேலும், அவர்களின் மணவாழ்க்கை சிறக்கவும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.