துருக்கியில் பாரிய தாக்குதல் சதி முறியடிப்பு ; 115 பேர் அதிரடி கைது
துருக்கியில் கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்ததாகக் கருதப்படும் 'ஐஎஸ்' (IS) பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய 100-க்கும் மேற்பட்டோரை அந்நாட்டுப் பாதுகாப்புப் படையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
இஸ்தான்புல் முழுவதும் 124 இடங்களில் மேற்கொள்ளப்பட்ட பாரிய சுற்றிவளைப்புத் தேடுதல்களின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகக் இஸ்தான்புல் நகர காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இவர்களிடமிருந்து துப்பாக்கிகள், தோட்டாக்கள் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. குறிப்பாக, கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு காலங்களில் தாக்குதல் நடத்த இவர்கள் திட்டமிட்டிருந்தமை விசாரணையில் தெரியவந்துள்ளது. தப்பியோடிய எஞ்சிய 22 பேரைத் தேடும் பணிகளில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
கைது செய்யப்பட்டவர்கள் துருக்கிக்கு வெளியேயுள்ள ஐஎஸ் முகவர்களுடன் நேரடித் தொடர்பில் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இரண்டு நாட்களுக்கு முன்பு, ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் துருக்கிய உளவு அமைப்பினர் நடத்திய தேடுதலில், ஐஎஸ் அமைப்பின் சிரேஷ்ட தலைவர் ஒருவரைத் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தியிருந்தனர்.
அவர் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. துருக்கியானது சிரியாவுடன் 900 கிலோமீற்றர் எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது.
சிரியாவின் தற்போதைய ஜனாதிபதி அஹ்மத் அல்-ஷாரா (Ahmed al-Sharaa), ஐஎஸ் பயங்கரவாதத்தின் எஞ்சிய பகுதிகளை அழிப்பதற்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் இணைந்து பணியாற்றுவதாக உறுதியளித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சிரியாவில் மூன்று அமெரிக்கர்கள் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, அமெரிக்கா சிரியாவிலுள்ள ஐஎஸ் நிலைகள் மீது 70-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி பாரிய தாக்குதலை நடத்தியுள்ளது.
ஐஎஸ் அமைப்பின் மீள் எழுச்சியைத் தடுக்க துருக்கி மற்றும் சிரிய அரசாங்கங்கள் பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரித்து வருகின்றன.
பண்டிகைக் காலத்தில் இவ்வாறான அச்சுறுத்தல்கள் நிலவுவதால் துருக்கி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், காவல்துறையினர் மற்றும் உளவுத்துறையினர் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.