சீனாவின் காலணித் தலைநகரத்தில் பாரிய தீ விபத்து ; 28 பேர் பலி
தென்கிழக்கு சீனாவின் ஜின்ஜியாங் (Jinjiang) நகரில் அமைந்துள்ள காலணி உற்பத்தித் தொழிற்சாலையொன்றில் இன்று (09) மதியம் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் சிக்கி குறைந்தது 28 பேர் உயிரிழந்துள்ளதாக சீன அரச செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது.
சமூக வலைதளங்களில் வெளியாகி வரும் காணொளிகளின்படி, தீப்பற்றிய கட்டிடத்திலிருந்து பெரும் கரும்புகை வானை நோக்கி எழும்புவதையும், தொழிற்சாலையின் கூரை மீது சிக்கிக்கொண்ட பணியாளர்கள் சிலர் உதவி கோரி அலறுவதையும் காண முடிகிறது.

நூற்றுக்கணக்கான மீட்புப் பணியாளர்கள் உடனடியாகச் செயல்பட்டு, தொழிற்சாலையின் உள்ளே இருந்த 200-க்கும் மேற்பட்டோரைப் பாதுகாப்பாக வெளியேற்றியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
இந்தத் துயரமான சம்பவம் குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங், இந்தத் தீ விபத்து பெருமளவிலான உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இந்த விபத்துக்கான காரணத்தை உடனடியாகக் கண்டறிய வேண்டும் என்றும், இதற்குப் பொறுப்பான அல்லது அலட்சியமாகச் செயல்பட்ட நபர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்குமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
தீ விபத்து ஏற்பட்ட ஜின்ஜியாங் நகரமானது சீனாவில் மட்டுமன்றி உலக அளவிலும் 'காலணித் தலைநகரம்' (Shoe Capital) என்று பிரபலமாக அழைக்கப்படுகிறது.
தரவுகளின்படி, உலகின் ஒட்டுமொத்த காலணி உற்பத்தியில் கிட்டத்தட்ட 20% இந்த ஒரு நகரிலிருந்தே பெறப்படுகிறது.
இங்கு அமைந்துள்ள ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகள் மூலம் ஆண்டுதோறும் 1.2 பில்லியனுக்கும் அதிகமான ஜோடி காலணிகள் உலகச் சந்தைக்கு விநியோகிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.