தட்டம்மை குறித்து கனடாவிற்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
உலகளவில் தட்டம்மை நோய் சம்பவங்களும் பரவலும் அதிகரித்து வரும் நிலையில், கனடா உள்ளிட்ட பல நாடுகள் கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என சர்வதேச சுகாதார அமைப்பு ஒன்று வலியுறுத்தியுள்ளது.
பான் அமெரிக்கன் ஹெல்த் நிறுவனம் (PAHO) வெளியிட்டுள்ள தொற்றுநோய் எச்சரிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வட மற்றும் தென் அமெரிக்க நாடுகள் தட்டம்மை நோய்க்கான தடுப்பூசி வழங்கல் மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

கனடாவில் கடந்த ஆண்டு மொத்தமாக 5,436 தட்டம்மை நோய் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அவற்றில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஜனவரி மாதத்தின் முதல் மூன்று வாரங்களிலேயே 67 உறுதிப்படுத்தப்பட்ட தட்டம்மை நோய் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
2025 ஆம் ஆண்டில், கடந்த ஐந்து ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் தட்டம்மை நோய் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துள்ள நிலையில், அதே போக்கு 2026 ஆம் ஆண்டிலும் தொடரும் அறிகுறிகள் காணப்படுகின்றன என பான் அமெரிக்கன் ஹெல்த் நிறுவனம் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கையில் குறிப்பிடப்பட்ட 13 நாடுகளில் மொத்தமாக 14,891 உறுதிப்படுத்தப்பட்ட தட்டம்மை நோய் சம்பவங்களும், 29 மரணங்களும் பதிவாகியுள்ளதாக பான் அமெரிக்கன் ஹெல்த் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது 2024 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 32 மடங்கு அதிகரிப்பு என கூறப்பட்டுள்ளது.