மெக்சிகோவின் முக்கிய கடத்தல் கும்பல் தலைவர் கைது
அமெரிக்காவின் எஃப்.பி.ஐ அமைப்பால் மிகவும் தேடப்பட்டு வந்த மெக்சிகோவின் முக்கிய போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவன் ஃபாஸ்டோ இசிட்ரோ மேசா ஃப்ளோரஸ், என்கிற 'எல் சாப்போ இசிட்ரோ', மெக்சிகோ பாதுகாப்புப் படையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.
சினலோவா மாநிலத்தில் இரவோடு இரவாக நடத்தப்பட்ட இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து அப்பகுதியில் பெரும் வன்முறை வெடித்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் வழங்கிய உளவுத்துறைத் தகவல்களின் அடிப்படையில் இந்தக் கைது நடவடிக்கை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதாக மெக்சிகோ அரசாங்கம் சனிக்கிழமை அதிகாலை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சினலோவா மாநிலத்தின் குவாசாவே நகரில் உள்ள ஒரு கட்டிடத்தில் மேசா ஃப்ளோரஸ் பதுங்கியிருப்பதை அறிந்த பாதுகாப்புப் படையினர், அப்பகுதியைச் சுற்றி வளைத்தனர்.
அப்போது போதைப்பொருள் கும்பலைச் சேர்ந்தவர்கள் துப்பாக்கிகள் மற்றும் வெடிகுண்டுகளைக் கொண்டு பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல் நடத்தினர்.
இதற்குப் பதிலடி கொடுத்த இராணுவத்தினர், வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்து மேசா ஃப்ளோரஸைக் கைது செய்தனர். ஆயுதம் ஏந்திய வீரர்கள் அவரைக் கைது செய்து இராணுவ வாகனத்தில் ஏற்றிச் செல்லும் காணொளியையும் அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.
பெல்ட்ரான் லெய்வா குற்றவியல் அமைப்பின் முக்கியத் தலைவரான மேசா ஃப்ளோரஸ், சினலோவா கார்டெல் கும்பலின் 'லாஸ் மாயோஸ்' பிரிவின் முக்கியக் கூட்டாளியாகச் செயல்பட்டு வந்தார். அமெரிக்காவிற்குப் போதைப்பொருள் கடத்தியது மற்றும் சட்டவிரோதமாக ஆயுதங்கள் வைத்திருந்தது ஆகிய குற்றங்களுக்காக எஃப்.பி.ஐ-யின் 'மிகவும் தேடப்படும் 10 குற்றவாளிகள்' பட்டியலில் இவர் இடம்பெற்றிருந்தார்.
சினலோவா மாநிலத்தின் கட்டுப்பாட்டிற்காகப் போட்டிப் பிரிவுகளுடன் மோதலில் ஈடுபட்டு வந்த கார்டெல் கும்பலுக்கு இவரது கைது பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. தங்கள் தலைவன் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அப்பகுதியில் வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டு தங்களது பலத்தைக் காட்ட போதைப்பொருள் கும்பல்கள் முயன்றுள்ளன.
குவாசாவே நகரில் பேஸ்பால் போட்டி நடந்து கொண்டிருந்த மைதானத்தில் துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதால், பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு ஓடும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
நகரின் பல இடங்களில் வாகனங்கள் மற்றும் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்குத் தீ வைக்கப்பட்டுள்ளன. வானில் வட்டமிட்ட ஹெலிகாப்டர்களிலிருந்து குடியிருப்புகளை நோக்கித் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதால் மக்கள் கடும் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.