மத்திய கிழக்கு பதற்றம் ; குவைத் கோரிக்கையை நிராகரித்த பாகிஸ்தான்
குவைத்துடன் சவுதி அரேபியா பாணியிலான பாதுகாப்பு ஒப்பந்தத்தை ஏற்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, அங்கு பாகிஸ்தான் ராணுவத்தை நிலைநிறுத்தும் யோசனைக்கு பாகிஸ்தான் மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றமான பாதுகாப்பு சூழலைத் தொடர்ந்து, தனது தேசிய பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் குவைத், பாகிஸ்தானுடன் கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தம் மேற்கொள்ள விருப்பம் தெரிவித்திருந்தது.
இதன் கீழ், சவுதி அரேபியாவில் பாகிஸ்தான் ராணுவம் பணியாற்றி வருவது போன்று, குவைத்திலும் ஆயிரக்கணக்கான பாகிஸ்தான் ராணுவ வீரர்கள், போர் விமானங்கள், வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் ட்ரோன்களை நிலைநிறுத்துமாறு குவைத் கோரிக்கை விடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும், இந்தக் கோரிக்கையை பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகம் நிராகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போதைய பிராந்திய சூழ்நிலையை கருத்தில் கொண்டு, குவைத்துக்கு ராணுவத் துருப்புகளை அனுப்பும் திட்டம் எதுவும் இல்லை என இஸ்லாமாபாத் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கு முக்கிய காரணமாக, ஏற்கனவே சவுதி அரேபியாவுடன் பாகிஸ்தான் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், குவைத்திலும் ராணுவத்தை நிலைநிறுத்தினால் அமெரிக்கா–ஈரான் மோதல் உள்ளிட்ட பிராந்திய அரசியல் மற்றும் பாதுகாப்பு சிக்கல்களில் நேரடியாக சிக்கிக்கொள்ளும் அபாயம் இருப்பதாக பாகிஸ்தான் கருதுவதாக கூறப்படுகிறது.
அதேவேளை, ராணுவத்தை அனுப்புவதற்கு பதிலாக, குவைத்துடன் ஐந்து ஆண்டு கால பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்ள பாகிஸ்தான் இணக்கம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த ஒப்பந்தத்தின் கீழ், ராணுவப் பயிற்சி, பாதுகாப்பு ஆலோசனைகள் மற்றும் உளவுத்துறை தகவல் பரிமாற்றம் உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்படவுள்ளன.
மேலும், பாதுகாப்பு ஒத்துழைப்புடன் இணைந்து, குவைத்திடமிருந்து எரிசக்தி துறையில் முதலீடுகளை ஈர்ப்பதற்கும் பாகிஸ்தான் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
குவைத்திற்கு ராணுவ வீரர்களை அனுப்ப மறுத்துள்ள பாகிஸ்தானின் இந்த முடிவு, மத்திய கிழக்கு பிராந்தியத்தின் தற்போதைய பாதுகாப்பு மற்றும் அரசியல் சூழ்நிலையின் பின்னணியில் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது.