அமெரிக்காவில் இடைக்காலத் தேர்தல் இன்று; முடிவுகளை ஆவலுடன் எதிர்பார்க்கும் சர்வதேசம்!
அமெரிக்காவில் 2026ஆம் ஆண்டுக்கான பாராளுமன்ற இடைக்காலத் தேர்தல் இன்று (03) நடைபெறுகிற நிலையில் அமெரிக்கா மட்டுமன்றி சர்வதேச அரசியல் அரங்கமும் இந்தத் தேர்தல் முடிவுகளை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.
இத்தேர்தலில் பிரதிநிதிகள் சபையின் 435 இடங்களுக்கும், செனட் சபையின் 100 இடங்களில் 35 இடங்களுக்கும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அத்துடன், 50 மாநிலங்களில் 36 மாநிலங்களுக்கான ஆளுநர் தேர்தல்களும் நடைபெறுகின்றன.

50 மாநிலங்களில் 36 மாநிலங்களுக்கான ஆளுநர் தேர்தல்
அமெரிக்காவின் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கான அரசியல் அதிகாரச் சமநிலையைத் தீர்மானிக்கும் முக்கிய தேர்தலாக இது கருதப்படுகிறது. ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான குடியரசுக் கட்சி தற்போது நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பெரும்பான்மையைக் கொண்டுள்ளது.
இந்த நிலையில், ஜனநாயகக் கட்சி பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபைகளில் தனது பலத்தை அதிகரித்து பெரும்பான்மையைப் பெறுவதற்காகப் போட்டியிடுகிறது.
பணவீக்கம், வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, சுகாதாரம், பொருளாதாரம் மற்றும் ஈரான் போர் உள்ளிட்ட விவகாரங்கள் தேர்தல் பிரசாரத்தில் முக்கிய இடம்பிடித்துள்ளன.
தேர்தலுக்கு முன்னதாகவே 5.7 கோடிக்கும் அதிகமான மக்கள் முன்கூட்டியே வாக்களித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தத் தேர்தலின் முடிவுகள் ட்ரம்பின் எஞ்சிய ஜனாதிபதி பதவிக்காலத்தில் அவரது அரசியல் மற்றும் சட்டமன்ற நடவடிக்கைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
குடியரசுக் கட்சி ஏதேனும் ஓர் அவையில் பெரும்பான்மையை இழந்தால், புதிய சட்டங்களை நிறைவேற்றுவதிலும் அரசின் முக்கிய நியமனங்களை முன்னெடுப்பதிலும் ஜனாதிபதிக்கு சவால்கள் ஏற்படலாம்.
மறுபுறம், ஜனநாயகக் கட்சிக்கு பாராளுமன்றத்தில் அதிக அதிகாரம் கிடைத்தால் ட்ரம்ப் நிர்வாகத்தின் நடவடிக்கைகள் மீதான கண்காணிப்பும் விசாரணைகளும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.