டசின் கணக்கானோர் இன்னமும் மாயம்: கிரேக்க அதிகாரிகள் தகவல்
தென்கிழக்கு கிரீஸ் தீவில் உள்ள கொந்தளிப்பான கடற்பகுதியில் படகு மூழ்கிய சம்பவத்தில் டசின் கணக்கான புலம்பெயர்ந்தோர் மாயமாகியுள்ளதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.
குறித்த சம்பவத்தை அடுத்து, இரண்டாவது நாளாக தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக கிரேக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காணாமல் போனதாக நம்பப்படும் சுமார் 30 முதல் 50 பேரை இன்னும் ஒரு கிரேக்க கடற்படைக் கப்பல் மற்றும் மூன்று வணிகக் கப்பல்கள் தேடிக்கொண்டிருப்பதாக வியாழக்கிழமை வெளியாகியுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
துருக்கியின் அண்டலியாவில் இருந்து இத்தாலிக்கு இவர்களை ஏற்றிச் சென்ற படகு புதன்கிழமை அதிகாலை கவிழ்ந்தது. சுமார் 33 கடல் மைல் தொலைவில் படகு மூழ்கிய சிறிது நேரத்திலேயே ஆப்கானிஸ்தான், ஈரான் மற்றும் ஈராக் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 29 பேர் மீட்கப்பட்ட பின்னர், உயிருடன் யாரும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றே கூறப்படுகிறது.
மேலும், படகில் மொத்தம் 60 முதல் 80 பேர் இருந்ததாக உயிர் பிழைத்தவர்கள் அதிகாரிகளிடம் கூறியுள்ளனர். சர்வதேச கடல் எல்லையில் குறித்த படகு கவிழ்ந்திருந்தாலும், விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் முழு பொறுப்பும் ஏற்பதாக கிரேக்க அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.
மத்திய கிழக்கு, ஆசியா மற்றும் ஆபிரிக்காவில் இருந்து புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு மிகவும் பொதுவான கடல் வழி துருக்கியில் இருந்து ஏஜியன் கடலில் அருகிலுள்ள கிரேக்க தீவுகள் என்பது குறிப்பிடத்தக்கது.