கனரக வாகனங்களின் விதிமீறல்களை கண்காணிக்க நவீன ஆளில்லா குட்டி விமானங்கள்!
துபாயில் சாலையில் செல்லும் கனரக வாகனங்கள் ஏற்படுத்தும் விதிமீறல்களை கண்காணிக்க செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இயங்கும் நவீன ஆளில்லா குட்டி விமானங்கள் பயன்படுத்தப்பட உள்ளது.
இது குறித்து துபாய் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஆளில்லா குட்டி விமானங்கள் துபாயின் பிரதான சாலைகளில் கனரக வாகன போக்குவரத்து அதிகமாக உள்ளது.
கப்பல்களுக்கு சரக்குகளை ஏற்றி செல்லும் கன்டெய்னர்கள், கட்டுமான பொருட்களை ஏற்றி செல்லும் பெரிய டிரக்குகள் என பல்வேறு வகையான கனரக வாகனங்கள் சாலைகளில் இயக்கப்பட்டு வருகிறது.
புறநகர் நெடுஞ்சாலைகளில் இயக்கப்படும் இந்த கனரக வாகனங்களின் விதிமீறல்களை கண்காணிக்க ஆளில்லா குட்டி விமானங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதற்காக துபாய் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையத்தின் 9 சிறப்பு அதிகாரிகள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு துபாய் சிவில் விமான போக்குவரத்து ஆணையம் அங்கீகாரம் அளித்துள்ளது. அந்த அதிகாரிகள் அனைவருக்கும் ஆளில்லா குட்டி விமானங்களை இயக்குவது குறித்த பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் இதுவரை மொத்தம் 300 ஆய்வுகள் ஆளில்லா குட்டி விமானங்கள் மூலம் செய்யப்பட்டுள்ளது. இதில் 48 விதிமீறல்கள் கண்டுபிடிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சாலையில் செல்லும் வாகனங்களை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியுடன் இந்த குட்டி விமானங்கள் ஆய்வு செய்யும். அதுமட்டுமல்லாமல் ஆட்கள் ஏறமுடியாத கனரக வாகனங்களின் மேற்பகுதிகள் மற்றும் அதில் ஏற்றப்பட்டுள்ள சரக்குகள் குறித்தும் எளிதாக இந்த விமானங்கள் ஆய்வு செய்கின்றன.
இதுவரை 580 மணி நேரம் இயக்கப்பட்டதில் 48 விதிமீறல்கள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.