மோஜ்தபா கமேனி உயிருடன் உள்ளார் ; அமெரிக்கா உறுதிப்படுத்தல்
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதல்களில் காயமடைந்ததாகக் கூறப்பட்ட ஈரான் தலைமை மதகுரு மோஜ்தபா கமேனி உயிருடன் இருப்பதாக அமெரிக்கா உறுதிப்படுத்தியுள்ளது.
ஈரான் மீதான போரின் ஆரம்ப கட்டத்தில் அமெரிக்கா - இஸ்ரேல் கூட்டுப் படைகள் மேற்கொண்ட தாக்குதலில் ஈரானின் தலைமை மதகுரு அயத்துல்லா அலி கமேனி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, அவரது மகனான 56 வயதுடைய மோஜ்தபா கமேனி நாட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.
எனினும், பின்னர் இடம்பெற்ற தாக்குதல்களில் மோஜ்தபா கமேனியும் காயமடைந்ததாக தகவல்கள் வெளியாகின.
அதனைத் தொடர்ந்து அவர் பொதுவெளியில் தோன்றாததால் அவரது உடல்நிலை குறித்து பல்வேறு ஊகங்கள் பரவி வந்தன.
இந்த நிலையில், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ செவ்வாய்க்கிழமை (ஜூன் 2) கருத்து தெரிவிக்கையில், மோஜ்தபா கமேனி உயிருடன் இருப்பதாக உறுதிப்படுத்தினார்.
மேலும், அவரது உடல்நிலை தொடர்ந்து முன்னேற்றம் கண்டு வருவதாகவும், அவர் தற்போது அதிக செயல்பாட்டுத் திறனுடன் இருப்பதாகவும் மார்கோ ரூபியோ தெரிவித்தார்.
மோஜ்தபா கமேனியின் உடல்நிலை தொடர்பாக அமெரிக்கா வெளியிட்டுள்ள இந்த தகவல், அண்மைக் காலமாக நிலவி வந்த பல்வேறு ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.