துறவிகளை மாற்றிய ரோபோ ; ஆன்மீக ஆலோசனை தரும் செயற்கை நுண்ணறிவு
உலகின் முன்னணி தொழில்நுட்ப நாடுகளில் ஒன்றான ஜப்பான், பல நூற்றாண்டுகள் பழமையான மத மரபுகளுடன் நவீன தொழில்நுட்பத்தை இணைக்கும் புதிய முயற்சியை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஜப்பானில் புத்த மதத்தை பின்பற்றுவோர் எண்ணிக்கை சுமார் 83 முதல் 87 மில்லியன் வரை, அதாவது நாட்டின் மக்கள் தொகையில் ஏறத்தாழ 46 சதவீதம் என மதிப்பிடப்படுகிறது.
இருப்பினும், பலர் புத்த மதத்தை மத நம்பிக்கையாக அல்லாமல் பாரம்பரிய கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகக் கருதுவதால், நாட்டின் பல புத்த கோவில்களில் துறவிகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இந்த சிக்கலுக்கு தீர்வாக, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் மூலம் மனித உருவில் இயங்கும் ரோபோ துறவியை ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
கியோட்டோ பல்கலைக்கழகம் சார்ந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் இந்த திட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இந்த ரோபோ “புத்தராய்டு” (BuddhaDroid) எனப் பெயரிடப்பட்டுள்ளதுடன், சமீபத்தில் ஷோரன்-இன் கோவில் எனும் வரலாற்று சிறப்புமிக்க கோவிலில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது.
மனித துறவியைப் போலவே ஆன்மீக ஆலோசனைகள் வழங்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
“புத்தபோட்-பிளஸ்” (BuddhaBot-Plus) எனப்படும் செயற்கை நுண்ணறிவு அமைப்பே இந்த ரோபோவின் மைய செயல்பாட்டு அமைப்பாகும்.

இது ஜெனரேட்டிவ் AI தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டதாகவும், உலகளவில் பரவலாகப் பயன்படுத்தப்படும் ChatGPT போன்ற AI மாதிரிகளின் தொழில்நுட்பக் கருத்துக்களை பயன்படுத்தி மேம்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
பாரம்பரிய ஆன்மீக வழிகாட்டுதலுக்கும் நவீன தொழில்நுட்பத்துக்கும் இடையே பாலமாக அமையும் இந்த முயற்சி, எதிர்காலத்தில் மத மற்றும் கலாச்சார சேவைகளில் செயற்கை நுண்ணறிவு முக்கிய பங்கு வகிக்கக்கூடும் என்பதற்கான எடுத்துக்காட்டாக பார்க்கப்படுகிறது.
The Buddharoid: Japan’s AI-powered robot monk trained in centuries of Buddhist scripture.
— Brian Roemmele (@BrianRoemmele) February 25, 2026
So many are wittingly and unwittingly mocking humanity with little thought. pic.twitter.com/dnrOBgsD1W