உறவை முறித்து கொள்வோம்: எச்சரிக்கும் ரஷ்யா
தங்கள் சொத்துகளை முடக்குவதால் அமெரிக்கா உடனான உறவை முறித்துக் கொள்ள ரஷ்யா தயங்காது என எச்சரிக்கை விடுத்துள்ளது.
உக்ரைன் மீதான படையெடுப்பை அடுத்து ரஷ்யா மீது ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளும் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.
மேலும், உக்ரைனுக்கு தேவையான ராணுவ உதவிகளையும் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் தொடர்ந்து வழங்கி வருகின்றன. இந்த நிலையில், ரஷ்ய வெளிவிவகார அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், உக்ரைன் விவகாரத்தில் அமெரிக்காவின் தலையீடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதனை ஏற்றுக் கொள்ள இயலாது. இதுதொடர்பாக ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ரஷ்ய-உக்ரைன் பிரச்சினையில் எந்தவொரு நாட்டின்தலையீட்டையும் ரஷ்யா விரும்பவில்லை.
ரஷ்யர்களின் சொத்துகள் அமெரிக்காவால் முடக்கப்படுமானால் அது இருதரப்பு உறவைமுற்றிலும் நிரந்தரமாக அழித்துவிடும். மேலும், இதுபோன்ற செயல்கள் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுக்கிறோம் என அதில் கூறப்பட்டுள்ளது.