சிரியாவில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 8 பேர் பலி
சிரியாவின் ஹோம் (Homs) நகரில் உள்ள ஒரு மசூதியில், வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகையின் போது இடம்பெற்ற குண்டுவெடிப்பில் குறைந்தது 8 பேர் உயிரிழந்ததுடன், மேலும் 18 பேர் காயமடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதல் இடம்பெற்ற இமாம் அலி இப்னு அபி தாலிப் மசூதி, ஹோம் நகரின் வாடி அல்-தஹாப் (Wadi al-Dhahab) பகுதியில் அமைந்துள்ளது.
இந்த பகுதி பெரும்பாலும் அலவாய் (Alawite) சிறுபான்மையினர் வசிக்கும் பகுதியாகும்.

ஹோம், சிரியாவின் மூன்றாவது பெரிய நகரமாகும். ஆரம்ப விசாரணைகளின் அடிப்படையில், மசூதிக்குள் வெடிகுண்டுகள் முன்கூட்டியே பதுக்கப்பட்டிருந்ததாக சந்தேகிக்கப்படுகிறது.
இந்த தாக்குதலுக்கு காரணமானவர்களை கைது செய்ய பாதுகாப்புப் படைகள் தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன.
மசூதி சுற்றுவட்டாரப் பகுதியில் பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டுள்ளதாக சிரிய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. சமீப வாரங்களில், சிரியாவின் பல பகுதிகளில் மத, இன மற்றும் அரசியல் முரண்பாடுகள் மீண்டும் தீவிரமடைந்துள்ளன.
பெரும் அளவிலான போர் நடவடிக்கைகள் குறைந்திருந்தாலும், நீண்ட காலமாக நிலவி வரும் பிளவுகள் நாட்டின் நிலைத்தன்மையை தொடர்ந்து பாதித்து வருகின்றன.
கடந்த ஆண்டு முன்னாள் அதிபர் பஷார் அல்-அசாத் பதவி வீழ்ந்ததன் பின்னர், சிரியாவில் பல கட்ட மத அடிப்படையிலான மோதல்கள் இடம்பெற்றுள்ளன.
அலவாய் சமூகத்தைச் சேர்ந்த அசாத், ரஷ்யாவுக்கு தப்பிச் சென்ற நிலையில், அவரது சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பல இடங்களில் கடுமையான அடக்குமுறைகளை எதிர்கொண்டுள்ளனர்.
கடந்த மார்ச் மாதத்தில், அசாத் ஆதரவாளர்கள் பாதுகாப்புப் படைகள் மீது நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, பல நாட்கள் நீடித்த வன்முறையில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர்.
இதில் பெரும்பாலானோர் அலவாய் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டது. வெள்ளிக்கிழமை நடந்த தாக்குதலை உள்ளூர் அதிகாரிகள் கடுமையாக கண்டித்துள்ளனர்.
“பாதுகாப்பையும் நிலைத்தன்மையையும் சீர்குலைத்து, சிரிய மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் மீண்டும் மீண்டும் நடைபெறும் அவல முயற்சிகளின் ஒரு பகுதியாகவே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது” என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
“அனைத்து வடிவங்களிலும் வெளிப்பாடுகளிலும் பயங்கரவாதத்தை எதிர்க்கும் தனது உறுதியான நிலைப்பாட்டை சிரியா மீண்டும் வலியுறுத்துகிறது” என வெளிநாட்டு விவகார அமைச்சு அறிக்கையில் தெரிவித்துள்ளது.