ஒன்டாரியோவில் இந்த வருடம் நுளம்பு பரவல் கடுமையாக இருக்கலாம்
ஒன்டாரியோ மாகாணத்தில் வெப்பமான காலநிலை காரணமாக, இந்த ஆண்டு நுளம்பு பரவல் மிகவும் தீவிரமாக இருக்கலாம் என கிருமிநாசினி நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
கடந்த சில வாரங்களில் ஏற்பட்ட வானிலை மாற்றம் எதிர்பார்க்கப்படும் சூழ்நிலைகள், நுளம்புகளின் இனப்பெருக்கத்திற்கு ஏற்ற சூழலை உருவாக்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில் ஏற்பட்ட இடியுடன் கூடிய மழையும் நிலத்தில் ஈரத்தன்மையை அதிகரித்துள்ளன.
இதனுடன், இரவும் பகலும் அதிக வெப்பமுடையதாக இருப்பது, நுளம்புகளின் இனப்பெருக்கத்திற்கு சிறந்த சூழலை உருவாக்குகிறது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
டொரண்டோ பொது சுகாதார சேவைகள் நுளம்புகளை கட்டுப்படுத்த சில நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொதுமக்கள் கடுமையான நுளம்பு கடி தாக்கத்திலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள, கீழ்காணும் வழிமுறைகளை பின்பற்ற பரிந்துரை செய்யப்படுகிறது.
ஒளிரும் நிறத்திலான ஆடைகளை அணியுமாறும், ஹெல்த் கனடா அங்கீகரித்த பூச்சிக்கொல்லி பயன்படுத்துமாறும், சூரிய உதயம் மற்றும் அஸ்தமன நேரங்களில் கூடுதல் முன்னெச்சரிக்கை எடுக்குமாறும், ஜன்னல்களிலும் கதவுகளிலும் உள்ள வலைப்பின்னல்களை சரிபார்க்குமாறும் கோரப்பட்டுள்ளது.