29 நாடுகளின் தூதர்களை திரும்ப அழைக்கும் டிரம்ப்; காரணம் என்ன?
'அமெரிக்கா ஃபர்ஸ்ட்' (America First) கொள்கையை உலகளவில் முன்னெடுப்பதற்காக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இலங்கைக்கான தூதர் உட்பட பல்வேறு நாடுகளில் பணியாற்றும் 29 தொழில்முறை தூதர்களை அதிரடியாகத் திரும்ப அழைத்துள்ளதாக சர்வதேச தகவ்ல்கள் தெரிவிக்கின்றன.
ஆப்ரிக்கா, ஆசியா மற்றும் ஐரோப்பா ஆகிய கண்டங்களில் உள்ள முக்கிய நாடுகளின் தூதரக அதிகாரிகளை மாற்றியமைப்பதன் மூலம், தனது நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்கும் நபர்களை அந்தப் பதவிகளில் அமர்த்த அவர் திட்டமிட்டுள்ளார்.

ஒரே நேரத்தில் பல தூதர்கள் நீக்கம்
29 நாடுகளில் உள்ள தூதரகத் தலைவர்களுக்கு (Chiefs of Mission) அவர்களின் பதவிக்காலம் ஜனவரி மாதத்துடன் முடிவடையும் என்று கடந்த வாரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாற்றமானது வெளிநாடுகளுடனான அமெரிக்காவின் இராஜதந்திர உறவுகளை மறுசீரமைக்கும் ஒரு முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.
அதேவேளை இவ்வாறு ஒரே நேரத்தில் பல தூதர்கள் நீக்கப்படுவது வழக்கமான நடைமுறை என்று அரசாங்கம் கூறினாலும், இது அதிகாரிகளிடையே பெரும் பரபரப்பையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த அதிரடி மாற்றத்தால் தூதர்கள் தங்களது வெளிநாட்டுச் சேவை (Foreign Service) வேலைகளை இழக்கமாட்டார்கள் என்றும், அவர்கள் விரும்பினால் மற்ற பணிகளைப் பொறுப்பேற்கலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் அமெரிக்க வெளியுறவுத்துறையில் ஏற்பட்டுள்ள இந்த அதிகார மாற்றம், ட்ரம்ப்பின் இரண்டாம் பதவிக்காலத்தின் தீவிரமான வெளியுறவுக் கொள்கையைப் பிரதிபலிப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.