உலகின் இளம் வயது கோடீஸ்வரராகி மாஸ் காட்டிய Mr. பீஸ்ட் ; சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
மிஸ்டர் பீஸ்ட் என்று அழைக்கப்படும் யூடியூப் பிரபலம் ஜிம்மி டொனால்ட்சன் 27 வயதிலேயே உலக கோடீஸ்வரர்களின் பட்டியலில் இணைந்து சாதனை படைத்துள்ளார்.
அவரது நிகர மதிப்பு தற்போது 1 பில்லியன் டாலர்களை எட்டியுள்ளது. இதில் பரம்பரை சொத்து எதுவும் இல்லை. அதாவது, அவர் தனது 27 வயதிலேயே இந்த ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை சொந்தமாக சம்பாதித்தார்.
சேவை திட்டங்கள்
இளம் வயதிலேயே யூடியூபராக தனது பயணத்தைத் தொடங்கிய மிஸ்டர் பீஸ்ட், தனது புதுமையான சவால்கள், பெரிய அளவிலான பரிசுகள் மற்றும் தொண்டு முயற்சிகளுக்காக உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்றார்.
2017 ஆம் ஆண்டில் "i counted to 100 000" என்ற வீடியோ மூலம் அவர் புகழ் பெற்றார். யூடியூப்பைத் தவிர, மிஸ்டர் பீஸ்ட் "பீஸ்ட் பர்கர்" என்ற துரித உணவு கடைகள் மற்றும் "ஃபீஸ்டபிள்ஸ்" என்ற சாக்லேட் நிறுவனத்தையும் வெற்றிகரமான வணிகங்களை நடத்தி வருகிறார்.
ஜூன் 2024 நிலவரப்படி, யூடியூப்பில் அதிக சந்தாதாரர்களைக் கொண்ட நபர் என்ற சாதனையையும் மிஸ்டர்.பீஸ்ட் படைத்துள்ளார். "பீஸ்ட் பிலாந்த்ரோபி" என்ற தொண்டு நிறுவனத்தை நிறுவி பல சேவை திட்டங்களை நடத்தி வருகிறார்.
ஆயிரக்கணக்கான மக்களுக்கு கண்பார்வை வழங்குதல், லட்சக்கணக்கான மரங்களை நடுதல் போன்ற திட்டங்களை இந்நிறுவனம் மேற்கொண்டுள்ளது. மிஸ்டர் பீஸ்ட், இறப்பதற்கு முன் தன்னிடம் உள்ள ஒவ்வொரு பைசாவையும் நன்கொடையாக வழங்குவதாக முன்னதாக அறிவித்தார்.
நிறைய பணம் சம்பாதிப்பதும், அதையெல்லாம் நல்ல காரியங்களுக்குச் செலவிடுவதும்தான் தனது வாழ்க்கையின் குறிக்கோள் என்று அவர் பல சந்தர்ப்பங்களில் கூறியுள்ளார்.