மண்சரிவில் சிக்கி புதையுண்ட பலர்... 42 சடலங்கள் மீட்பு
வடகிழக்கு இந்தியாவில் இரயில் பாதை கட்டுமான தளத்தில் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி டசின் கணக்கானவர்கள் கொல்லப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதன்கிழமை நடந்த சம்பவத்திற்குப் பிறகு, இம்பாலுக்கு அருகிலுள்ள நோனி என்ற நகரத்தின் கரடுமுரடான மலைகளில் மீட்புப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
இதனிடையே, மணிப்பூர் மாகாண உள்ளூர் செய்திகளின்படி, இறப்பு எண்ணிக்கை தற்போது 42 என உயர்ந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. ஞாயிறன்று மட்டும் 2 வயது குழந்தை உட்பட 8 பேர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது.
இறந்தவர்களில் 27 பேர்கள் பிராந்திய இராணுவ வீரர்கள் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இருபது பேரை காணவில்லை, கனமழைக்கு இடையே தொடர்ந்து தேடுதல் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மேலும், தொடர்ச்சியான மழை வடகிழக்கு இந்தியாவின் பெரும்பகுதிகளில் அழிவை ஏற்படுத்தியுள்ளது. இங்குள்ள 45 மில்லியன் மக்களையும் அண்டை நாடான வங்காளதேசத்தையும் கனமழை கடுமையாக பாதித்துள்ளது.
மட்டுமின்றி, வடகிழக்கு இந்தியா முழுவதும் மோசமான வானிலை காரணமாக, அசாம், மணிப்பூர், திரிபுரா மற்றும் சிக்கிம் போன்ற மாநிலங்களில் பெய்த கனமழை மற்றும் மண்சரிவில் 200 பேர் உயிரிழந்துள்ளனர், வங்கதேசத்தில் 42 பேர் உயிரிழந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் மட்டும் ஆயிரக்கணக்கானோர் பாதுகாப்பான பகுதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக உள்ளூர் நிர்வாகங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.