அமெரிக்காவில் மனைவி, மகனைக் கொலை ; இந்திய தொழிலதிபர் செய்த விபரீத செயல்
அமெரிக்காவின் நியூகாஸ்டில் பகுதியில் வசித்து வந்த கர்நாடக மாநிலம் மைசூருவைச் சேர்ந்த தொழிலதிபர் ஹர்ஷவர்தனா கிக்கேரி (45), தனது மனைவி சுவேதா (41) மற்றும் 14 வயது மகன் துருவா கிக்கேரியை சுட்டுக்கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
ஏப்ரல் 24ஆம் திகதி இந்த சம்பவம் நடந்ததாகவும், சம்பவத்தின் போது இவர்களது இளைய மகன் வீட்டில் இல்லாததால், அவர் உயிர் பிழைத்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவத்துக்கான பின்னணி
இந்த சம்பவத்துக்குப் பின்னணி என்ன என்பது குறித்து தெரியவரவில்லை.
விசாரணை முடிந்து, சம்பவத்தின் பின்னணியில் நடந்தது என்ன என்பது கண்டறியப்படும்வரை இது குறித்து வேறெந்த கருத்துகளும் கூற முடியாது என விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மைசூருவில் படித்த கிக்கேரி, பிறகு அமெரிக்கா சென்றுள்ளார். அமெரிக்காவில் எலக்ட்ரிக்கல் பொறியியலில் முதுகலைப் பட்டம் பெற்ற அவர் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் ரோபோடிக்ஸ் பிரிவிலும் பணியாற்றியுள்ளார்.
அமெரிக்கா சென்று ஹோலோ சூட் என்ற நிறுவனத்தைத் தொடங்கி அவர் கண்டுபிடித்த கண்டுபிடிப்புகள் ஊடகங்களில் தலைப்புச்செய்தியாகியிருந்தது. இவர், மைக்ரோசாஃப்டின் தங்க நட்சத்திரம் விருது, இன்போசிஸ் நிறுவனத்தின் சிறப்பு நிபுணத்துவம் பெற்றவர் என்ற விருது உள்ளிட்டவற்றை வாரிக் குவித்துள்ளார்.