நேபாள வெள்ளப்பெருக்கு: உயிரிழப்பு 95 ஆக உயர்வு :தமிழர்கள் உட்பட நூற்றுக்கணக்கான இந்தியர்களை மீட்க தீவிர நடவடிக்கை!
நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளின் நிலவரங்கள் மற்றும் உயிரிழப்புகள் குறித்த முழுமையான அதிகாரப்பூர்வ விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
எனினும், இதுவரை கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் சுமார் 95 பேர் உயிரிழந்துள்ளதாக அஞ்சப்படுகிறது.
வழக்கமான கனமழை ஏதும் இல்லாத நிலையில், இமயமலைப் பகுதியில் ஏற்பட்ட திடீர் பனிப்பாறை சரிவே (Glacial Avalanche) இந்த அசாதாரண வெள்ளத்திற்குக் காரணம் என சர்வதேச மலை வளர்ச்சி மையத்தின் (ICIMOD) பருவநிலை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

பனி மற்றும் பாறைச் சிதைவுகள் ஆற்றின் குறுக்கே தற்காலிக அடைப்பை ஏற்படுத்தி, பின்னர் அது திடீரென உடைந்து பேரிரைச்சலுடன் பெருக்கெடுத்ததால் கீழ்நிலைப் பகுதிகள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.
மேலும், புவி வெப்பமயமாதலால் ஏற்படும் தீவிர பருவநிலை மாற்றமும் இத்தகைய தொடர் இயற்கைச் சீற்றங்களுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.
நேபாள சுற்றுலா வாரியம் வெளியிட்டுள்ள தகவலின்படி, காணாமல் போனவர்களில் 341 பேர் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் ஆவர். காணாமல் போனவர்களில் நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்தியர்கள் என்றும், குறிப்பாக அதிக எண்ணிக்கையிலான தமிழர்கள் இதில் அடங்குவர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்கா, நெதர்லாந்து, மலேசியா உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும் மாயமாகியுள்ளனர். வெள்ளத்தில் சிக்கிய 100-க்கும் மேற்பட்டோரை நேபாள மீட்புக் குழுவினர் இதுவரை பத்திரமாக மீட்டுள்ளனர்.
காணாமல் போன இந்தியர்களை மீட்க இந்திய அரசும், தமிழக அரசும் தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.
குறிப்பாக, பாதிக்கப்பட்ட தமிழர்களைப் பாதுகாப்பாக மீட்கத் தேவையான அனைத்து அவசர நடவடிக்கைகளையும் விரைந்து மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு தமிழக முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
தற்போது நேபாளம் மற்றும் திபெத் பகுதிகளில் இந்து மற்றும் பௌத்த யாத்திரிகர்கள் அதிகளவில் பயணம் மேற்கொள்ளும் பருவக்காலமாகும்.
இதன் காரணமாக, நேபாளத்தில் உள்ள தங்களது நாட்டுப் பிரஜைகள் அந்நாட்டு அரசின் பாதுகாப்பு அறிவுறுத்தல்களைக் கண்டிப்பாகப் பின்பற்றுமாறு பிரிட்டன், அவுஸ்திரேலியா, பிரான்ஸ், நார்வே, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட பல நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
இதற்கு முன்னர் கடந்த 2015-ஆம் ஆண்டு நேபாளத்தில் ஏற்பட்ட கொடூர நிலநடுக்கத்தில் 9,000 பேர் உயிரிழந்தனர். அதுவே நேபாள வரலாற்றில் பதிவான மிக மோசமான இயற்கைப் பேரழிவாகக் கருதப்படுகிறது.