காசா திட்டம் குறித்து நெதன்யாகு விளக்கம்
காசாவை முழுமையாகக் கைப்பற்றும் திட்டம் என்பது ஆக்கிரமிப்பு அல்ல என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அறிவித்துள்ளார். அது காசாவை ஹமாஸ் அமைப்பிடம் இருந்து விடுதலை பெறச் செய்யும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முன்னதாக, காசாவை முழுமையாக ஆக்கிரமிக்கும் திட்டத்திற்கு இஸ்ரேலிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. காசாவில் ஏற்கனவே 75 சதவீத பகுதிகளைத் தனது கட்டுப்பாட்டில் இஸ்ரேல் வைத்துள்ள நிலையில், மீதமுள்ள பகுதிகளையும் கைப்பற்ற பிரதமர் நெதன்யாகு உத்தரவிட்டார்.
எனினும், இந்த முடிவை இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் விமர்சித்துள்ளனர்.
அத்துடன், இது பணய கைதிகளை ஆபத்தில் தள்ளும் செயல் எனக்கூறி இஸ்ரேலிய மக்களும் நெதன்யாகு முடிவை எதிர்த்து வருகின்றனர். இந்த நிலையில் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது திட்டம் குறித்து தமது எக்ஸ் தள பதிவில் விளக்கமளித்துள்ளார்.
அதன்படி, நாம் காசாவை ஆக்கிரமிக்கவில்லை. மாறாக, காசாவை ஹமாஸிடமிருந்து விடுவிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், காசாவில் இராணுவ நடவடிக்கைகளைத் தடுத்து, அமைதியான நிர்வாகத்தை நிறுவுவதற்கு உறுதி பூண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாலஸ்தீன அதிகாரசபை, ஹமாஸ் அல்லது வேறு எந்த பயங்கரவாத அமைப்பும் அந்தப் பகுதியில் இருக்காது என்றும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார்.