கைதில் இருந்து தப்பிக்க புதிய வழியில் பறந்த நெதன்யாகுவின் விமானம்?
இஸ்ரேலில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகரத்துக்குச் சென்ற இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் விமானம் வழக்கமான பாதையைத் தவிர்த்து புதிய பாதையில் பயணித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொது அவைக் கூட்டம், நியூயார்க் நகரில் நடைபெற்று வருகின்றது.
ஐ.நா. அவைக் கூட்டம்
இந்த நிலையில், ஐ.நா. அவைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவில் இருந்து விமானம் மூலம் நேற்று முன்தினம் (செப். 25) நியூயார்க் நகருக்குச் சென்றடைந்தார்.
இந்தப் பயணத்தின்போது, நெதன்யாகுவின் விமானம் பல ஐரோப்பிய நாடுகளின் வான்வழியைத் தவிர்த்து புதிய பாதையில் பறந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், அவரது விமானம் வழக்கத்தை விட 600 கி.மீ. கூடுதலாகப் பயணித்துள்ளது.
இதுகுறித்து, விமானப் பயணங்களைக் கண்காணிக்கும் இணையதளங்களில் வெளியான வரைப்படங்களில் அவரது விமானம் புதிய பாதையில் பறந்திருப்பது பதிவாகியுள்ளது.
முன்னதாக, ஐ.நா.வின் பொது அவைக் கூட்டத்தில் பிரான்ஸ், பிரிட்டன், ஆஸ்திரேலியா மற்றும் கனடா ஆகிய நாடுகள் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்துள்ளன.
இதையடுத்து, நெதன்யாகுவை கைது செய்ய வேண்டுமென ஐ.நா.வில் பல நாடுகளின் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளதால், கைது செய்யப்படுவதற்கு பயந்து அவரது விமானம் புதிய பாதையில் பறந்ததுள்ளது என பலரும் விமர்சித்து வருகின்றனர்.